Header Ads

 • BREAKING  முதல்வருடன் மோதல் எதிரொலி, அமைச்சர் சி.வி.சண்முகம் பதவிக்கு ஆபத்தா?

  சென்னை தலைமைச் செயலகத்தில், கடந்த இரண்டு நாள்களாக ஒரு விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் பெரிய மோதல் வெடித்துள்ளது என்பதுதான் அது.

  சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் எதையும் பட்டென்று பேசக்கூடியவர். அமைச்சர் சம்பத் வசம் இருந்த சுரங்கத் துறையை எடுத்து சி.வி.சண்முகத்திடம் தரப்பட்டது. அதிலிருந்து, "தன்னுடைய துறையில் முதல்வர் தலையிடக் கூடாது!'' என்கிற ரேஞ்சில்  சி.வி.சண்முகம் அதிகாரம் காட்ட ஆரம்பித்தார். அதிகாரிகளிடமும் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே அரசல்புரசலாக உரசல் இருந்துகொண்டேயிருந்தது. தேர்தலுக்கு பா.ம.க-வுடன் கூட்டணி அமைந்தபோது இருவரும் சற்று நெருக்கமாயினர். ஆனால் தேர்தலுக்குப் பின் மீண்டும் இருவருக்குமிடையே மோதல் வெடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த சி.வி.சண்முகம், "என்னுடைய சுரங்கத் துறை சம்பந்தப்பட்ட ஃபைல் ஒன்றைத் தலைமைச் செயலாளர் மூலமாக வரவழைத்து நீங்கள் உத்தரவு பிறப்பித்ததாகக் கேள்விப்பட்டேனே?'' என்று கேட்டிருக்கிறார். அதற்கு எடப்பாடி, "முதல்வரான நான் எந்த ஃபைலையும் பார்க்க முடியும்!'' என்று பதில் சொல்ல… இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. அப்போது தனது அதிருப்தியைக் கடுமையான வார்த்தைகளில் தெரிவித்துவிட்டு கடும்கோபத்துடன் வெளியேறியிருக்கிறார், சி.வி.சண்முகம்.

  இப்போது நடந்துள்ள இந்த மோதலுக்கு முன்னுரையாக ஒரு சம்பவத்தைத் தலைமைச் செயலக வட்டார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

  "தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக, சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் சில முக்கியமான ஒப்பந்தப் பணிகள் நடந்துள்ளன. அந்தப் பணிகளின் மதிப்பீட்டுக்கேற்ப மாவட்ட அமைச்சர் என்கிற முறையில் அமைச்சர்களுக்கு கமிஷன் வரவேண்டும். ஆனால், அந்தப் பணிகளுக்கான கமிஷன் சி.வி.சண்முகத்துக்குப் போகவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் கேட்டதற்கு, `முதல்வர் அலுவலகத்தில் கேட்டுக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார்கள். அதையடுத்து, முதல்வரை நேரில் சந்தித்த அவர், `இந்த கமிஷனையும் நீங்களே வாங்கிக்கொண்டால் மாவட்ட அளவில் நாங்கள் எப்படிக் கட்சி நடத்தமுடியும்… என் மாவட்டத்தில் நடக்கும் டெண்டர், கான்ட்ராக்ட் எதுவாயிருந்தாலும் அதற்குரிய கமிஷன் என்னிடம்தான் வரவேண்டும்' என்று கறாராகப் பேசியிருக்கிறார், சண்முகம்.. அதற்கு எடப்பாடி தரப்பில், "உங்கள் மாவட்டம் உங்களுக்குப் பெரியதுதான். ஆனால், எனக்கு அதைவிடப் பெரிய பொறுப்புகள் இருக்கின்றன. நம் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைக்கவேண்டியிருக்கிறது. டெல்லி தலைவர்களைச் சரிகட்ட வேண்டியிருக்கிறது. தேர்தல் செலவுகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் நான் எங்கே போவது?' என்று கேட்டிருக்கிறார். ஆனாலும் சி.வி.சண்முகம், தான் சொன்னதையே மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில், முதல்வரை அமைச்சர் வேலுமணியும், சி.வி.சண்முகத்தை அமைச்சர் தங்கமணியும் பேசி சமரசம் செய்திருக்கிறார்கள். அதன்பிறகு இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி மோதல்கள் நடந்திருக்கின்றன. அதன் உச்சமாகத்தான் இப்போது இந்த மோதல் நடந்திருக்கிறது!'' என்றார்கள்.

  இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் அமைச்சரவை சீனியர்களை மனம்திறந்து பேசியிருக்கிறார். அதுபற்றி கட்சியின் சீனியர் பிரமுகர் ஒருவர் கூறுகையில், "கட்சி நடத்துவதற்கு அம்மா (ஜெயலலிதா) காலத்தில் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் பெரும் தொகையை அமைச்சர்கள் தருவார்கள். இப்போது சி.வி.சண்முகம் உட்பட யாருமே அதைத் தருவதில்லை. தரச் சொல்லி எடப்பாடியும் கேட்பதுமில்லை. அவரிடம் இருக்கும் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைகளை வைத்துதான் கட்சியின் செலவுகளையும் அவர் ஈடுகட்டுகிறார். அவரையே இப்படி டென்ஷன்படுத்துகின்றனர். இதனால் கடுப்பான முதல்வர், `எனக்கு முதல்வர் பதவியே தேவையில்லை. எல்லோரும் சேர்ந்து பொதுத்தேர்தலைச் சந்திப்போம்' என்று எச்சரித்துவிட்டார். இப்போதைக்குப் பிரச்னை சற்றுத் தள்ளிப்போடப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பெரிதாக வெடிக்கலாம்!'' என்றார்.

  ஏற்கெனவே எம்.எல்.ஏ-க்கள் பலரும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், இந்த மோதல் வெடித்திருப்பதால் அமைச்சர் பதவியிலிருந்து சி.வி.சண்முகம் கழற்றிவிடப்படலாம் என்ற பேச்சும் கோட்டை வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.


  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad