Header Ads

 • BREAKING  முகிலன்

  'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார்வைக்கு அவன் புழுவைப் போலத் தெரிவான். பாலியல் புகார் என்பது சட்டென்று மக்களின் மனதை உணர்ச்சிவயப்படுத்தி சிந்திக்கும் ஆற்றலை மட்டுப்படுத்தி விடக்கூடியது, ஏனெனில் பாலியல் குற்றவாளிக்கு எதிராக குரல்கொடுப்பது ஒருவன் தன் யோக்கியதையை பிரகடனம் செய்யும் மறைமுக வாய்ப்பாகவும் இருக்கிறது. இதைப் பிழை சொல்லமுடியாது, நாம் அப்படித்தான் இந்த சமூகத்தல் ஒழுக்க ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கிறோம். ஆக இந்த யோக்கியதையை பிரகடனம் செய்யும் வாய்ப்பை மனம் உடனே பயன்படுத்த நினைக்குமே தவிர ஆராயாது. தானொரு கண்ணியமானவன் தன்னை விட அவன் கீழ்மையானவன் என்பதில் மனதுக்கு மகிழ்ச்சி இருக்கிறது. அதுவே அவன் ஒரு நல்ல பிம்பம் உள்ள பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவனின் அப்பிம்ப சிதைவுகளை மனம் உள்ளூரக் கொண்டாடத் துவங்கி விடுகிறது. 

  முகிலனின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட உடன் இதன் அடிப்படையிலேயே தமிழக மனம் முகிலனைத் தூற்றி எதிர்வினை ஆற்றக் காண்கிறேன். இதற்காகத்தான் பாலியல் குற்றச்சாட்டு, வேறு எந்த முறையில் குற்றம் சாட்டினாலும் அது அவ்வளவு வீரியமாக மக்களை சென்றடையாது. எதிர்வினை ஆற்றும் பலருக்கு முகிலன் எதற்காக போராடினார் என்று கூடத் தெரியாது என்பதே நிஜம். 

  இப்போது கொஞ்சமாக சிந்திப்போம். 
  முகிலனைக் காணவில்லை என்று நீதிமன்றத்தில் ஆதரவாளர்கள் ஆட்கொணர்வு மனு தந்தார்களே அது அதிகம் கவனம் பெறுமா? அல்லது என்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தி தலைமறைவாகிவிட்டான் அவனை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று அப்பெண் ஆட்கொணர்வு மனு கொடுத்து இருந்தால் அது அதிக கவனம் பெறுமா? ஆட்கொணர்வு மனு கூட வேண்டாம் காவல் நிலையத்தில் புகாராவது அளித்து இருக்கலாம் தானே? ஏன் முகிலன் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த ஐந்து மணி நேரத்திற்குள் பாலியல் புகார் தரப்பட்டு வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்படவேண்டும். அப்படிதான் இயங்கி வருகிறதா என்ன காவல் துறை? என்னவொரு அவசரம்! 
  பாலியல் வழக்கிற்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்பவன் தற்போதைய முகிலனின் சிதைந்து போன தோற்றத்திலா இருப்பான்? தாடி மீசையெலலாம் காடாய் வளர்ந்து உருவழிந்து கண்களில் ஒரு பித்துக்காரனின் பாவனையை சுமந்தா இருப்பான்? 
  எல்லாம் விடுவோம், முகிலன் கண்டுபிடிக்கப்பட்டு இந்தப் பாலியல் குற்றச்சாட்டு வருவதற்கு முன்பே முகிலனை காவல்துறை வண்டியில் ஏற்றும் காட்சியைப் பாருங்கள். கழுத்தைப் பிடித்து எத்தனை பலவந்தமாக ஏற்றப்படுகிறார் என்று தெரியும். ஒரு கொலைக்குற்றவாளியைக் கூட இப்படி மரியாதை தரக்குறைவாக நடத்தமாட்டார்கள். நாட்டு நலனுக்காக போராடுவது மாபெரும் தேசக்குற்றம். 

  முகிலனின் மீது சொல்லப்பட்ட பாலியல் புகார் தக்க ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படலாம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைத்துவிட்டதாகப் புளகாங்கிதம் அடைந்து- போராளி என்னும் பெயரில் காமுகன் என்று கட்டுரை எழுதிக்கொள்வார்கள்.
  தமிழ்நாட்டில் முட்டாள்களாக இருப்பது அவரவர் தார்மீக உரிமை. 

  ஊடகம் அறத்தோடு என்ன செய்கிறதென்று பார்ப்போம்.
                                         
                                                                          - யாத்திரி

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad