Header Ads

 • BREAKING  சுனாமி வரப்போகிறது, எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள்.


  பிஸ்கட் கம்பெனி மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலை மூடப்படுவதால் அந்த முதலாளிகளின் வருமானம் பாதிக்கப்படுவதற்கு நாம் ஏன் பதற்றப்பட வேண்டும்? 

  ஆட்டோமொபைல் தொழிற்சாலை என்பது ஒற்றை முதலாளி அல்லது அதன் பங்குதாரரர்களை மட்டும் சார்ந்ததில்லை. அங்கே பணியாற்றும் சில ஆயிரம் தொழிலாளர்களின் பணி மற்றும் அவர்களின் குடும்பம் என்று மட்டுமில்லை. ஒரு வாகனத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கென சென்னை, கோவை போன்ற பல ஊர்களில் பல்லாயிரத்துக்கும் அதிகமான சிறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. பெரும்பாலான வாகனத் தொழிற்சாலைகள் இத்தகைய சப்ளையர்களிடமிருந்து பாகங்களை வாங்கிப் பொருத்தி, சோதனை செய்து, விளம்பரம் செய்து விற்பனையில் இலாபம் பார்ப்பதுதான் இலக்கு. இத்தகைய உதிரி பாகங்களின் உற்பத்தி நிறுவனம் ஒவ்வொன்றும் ஓரிரு தொழிலாளர்கள் முதல் சில நூறு பேர்களை வைத்துக் கொண்டு பாகங்களை உற்பத்தி செய்து அவற்றை வாகனத் தொழிற்சாலைகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. வெறுமனே திருகாணி உற்பத்தியை மட்டுமே செய்து கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் கூட உண்டு. அந்த நிறுவனம் எதைப்பற்றியும் யோசிக்காமல் தினசரி லட்சக்கணக்கான திருகு ஆணிகளை உற்பத்தி செய்து அவற்றை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள். இத்தகைய சார்புத் தொழிற்சாலைகளின் நிலையெல்லாம் கேள்விக்குறிக்குள்ளாகும். அங்கே பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவர்களின் குடும்பம் திக்கற்று நிற்கும். கோயமுத்தூரிலும், ஸ்ரீபெரும்புதூரிலும், இராணிப்பேட்டையிலும் சி.என்.சி எந்திரங்களையும், லேத்களையும் வைத்து தொழில் செய்து கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம். 

  வெவ்வேறு விதமான தியரிகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  'ஒருவேளை பி.எஸ்.என்.எல்லை மூடிவிட்டால் அங்கேயிருக்கும் தொழிலாளர்கள் ஜியோவுக்குச் செல்ல முடியாதா?' என்று கூட கேள்விகள் உலவுகின்றன. எந்தவொரு பெரு நிறுவனத்திற்கும் அடுத்த நிறுவனத்தின் அறிவுசார்ந்த உடைமை (Intellectual Properties) மற்றும் அதன் வாடிக்கையாளர்கள்தான் குறியாக இருக்கும். இன்-ஆர்கானிக் வளர்ச்சி என்ற பெயரில் இன்னொரு நிறுவனத்தை விலைக்கு வாங்குவது, தம்மோடு இணைத்துக் கொள்வது என்பதெல்லாம் கூட அந்நிறுவனத்தின் இத்தகைய சொத்துகளை அபகரிப்பதாகத்தான் இருக்குமே தவிர மற்றொரு நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வேலை கொடுத்து மனிதாபிமானத்தைத் தாங்கிப்பிடிப்பதாகவெல்லாம் இருக்காது.  'பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது' என்று சொல்லிவிட்டு படிப்படியாக வெளியேற்றிய பல நிறுவனங்கள்தான் இங்கே அதிகம்.

  பி.எஸ்.என்.எல் நிறுவனம் காலியாகுமானால் அதன் வாடிக்கையாளர்களை வேண்டுமானால் அதன் போட்டி நிறுவனங்கள் அபகரிக்க  முயலும். தவிர, அங்கேயிருக்கும் வெகு சில பணியாளர்களுக்கு- அவர்கள் தம் நிறுவனத்துக்கு தேவைப்படுவார்கள் எனக் கருதுமானால் மட்டுமே- பணிக்கு எடுக்கும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அலுவலகப் பணியாளர்கள், களப்பணியாளர்களை எல்லாம் எந்தக் காலத்திலும் ஜியோ போன்ற நிறுவனங்கள் வேலைக்கு எடுக்காது. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. 

  எந்த வகையிலும் ஒரு தொழிற்துறை அல்லது தொழிற்சாலை நசிவுறும் போதும், மூடும் போதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலர் பாதிப்படைவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை. நம் கண்களுக்குத் தெரிவதெல்லாம் நேரடியான பாதிப்புகள்தான். அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். விவாதிப்போம். ஆனால் மறைமுக பாதிப்புகள்தான் மிகக் குரூரமானது. பல லட்சக்கணக்கான குடும்பங்களின் அடிவயிற்றில் கை வைக்கக் கூடியது. அரசாங்கத்துக்கும், தொழிற்துறையினருக்கும் அது தெரியும்.

  அடுத்து நெசவுத் தொழில்தான் முடங்கும் என்கிறார்கள். அதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. கோயமுத்தூர், திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முந்தைய இச்சமயத்தில் துணிகளுக்கான கடுமையான தேவை இருக்கும். நிறுவனங்கள் வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் இப்பொழுது ஸ்பின்னிங் மில்கள் காற்றாடிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட பல ஸ்பின்னிங் மில்கள் முடிந்துவிட்டன என்கிறார்கள். இத்துறையினரிடம் 'இந்தியச் சந்தைதான் பிரச்சினையா?' என்றால் 'ஆமாம்' என்கிறார்கள். ஏற்றுமதிக்கான வெளிநாட்டுச் சந்தை நன்கு இருக்கிறது. ஆனால் அத்தனை பேரும் வெளிநாட்டுச் சந்தைக்குள் நினைத்தது நினைத்தபடி இறங்கிவிட முடியாது.

  துரதிர்ஷ்டவசமாக, நிலைமை சீரடையாமல் நெசவுத் தொழில் அடி வாங்கினால் அதன் பாதிப்பும், வேலை இழப்பும் வாகனத் துறையை விட மிகக் கடுமையானதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

  ஒரு தொழில் நசிவுற ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்று முதலாளிகள் விரும்பும்பட்சத்தில் அவர்கள் திரும்பத் திரும்ப இத்தகைய எதிர்மறையான கருத்துகளை கசியவிடலாம். அதற்கான கார்போரேட் லாபிகள் உண்டு. அரசாங்கத்தை படிய வைக்க நிறுவனத்தையே மூடினாலும் கூட முதலாளிகளுக்கு அவை வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைதான். ஆனால் நம்பியிருக்கும் தொழிலாளிக்கும் அவனது குடும்பத்துக்கும்தான் அது ஜீவாதாரப் பிரச்சினை.

  ஒருவேளை, வாகனத் துறை மட்டுமே தள்ளாடும் பட்சத்தில், பிற பொருளாதாரக் காரணிகள் வலுவாக இருக்குமெனில் பெரிதாகக் கவலைப்பட எதுவுமில்லைதான். ஆனால் வாகன உற்பத்தித் துறைக்குப் பிறகாக நெசவு என துறைகள் வரிசை கட்டும் போதுதான் பதற வேண்டியிருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்கிறது, பங்குச்சந்தை தினசரி பாதாளத்தில் விழுகிறது. இப்படி ஒவ்வொன்றாகச் சேர்த்துப் பார்க்கும் போது ஏதோ சரியில்லை என்றுதானே அர்த்தம்? அதைத்தான் சில மாதங்களாக பொருளாதார வல்லுநர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கும் முன்பே நெசவுத் தொழில் மோசமடைகிறது என்றார்கள். அப்பொழுது கோவையில் சில நண்பர்களிடம் விசாரித்த போது 'எலெக்‌ஷன் டைம் இப்படித்தான் இருக்கும்..ஜூன், ஜூலையில் சரியாகிடும்'என்றார்கள். இன்றைக்கு அவர்களிடம் பேசினால் உண்மையிலேயே பதறுகிறார்கள். மக்களின் செண்டிமெண்ட் சரியில்லை என்கிறார்கள். மக்கள் செலவு செய்யத் தயங்கினால் நிலைமை இன்னமும் விபரீதமாகும். சுற்றுலாத்துறை, தினசரி உபயோகப் பொருட்களுக்கான சந்தை உட்பட மக்களின் உபரி செலவினத்தை நம்பியிருக்கும் பெரும்பாலான துறைகள் சிக்கலில் மாட்டும். 

  ஒரு நாட்டின் பொருளாதாரம் சிரமத்தில் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படும் போதே அரசாங்கம் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சூழல்களில் அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் மக்களின் மனநிலை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் மிகப்பெரிய காரியம். தாங்கள் மேற்கொண்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள், அதனால் என்ன நல்ல விளைவுகள் ஏற்படப் போகின்றன என்பதையெல்லாம் மக்களிடம் பேச வேண்டும். தொழிற்துறையினருக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். முதலீட்டாளர்களின் மனநிலையில் உற்சாகத்தைக் கொண்டு வர வேண்டும். அதுதான் இங்கே பிரச்சினையாக இருக்கிறது.

  ஒருவேளை இவையெல்லாம் வதந்தியாக, அரசியல்மயப்படுத்தப் பட்ட பிரச்சாரங்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட பொருளாதாரம் குறித்தும், அதன் தற்போதைய நிலைமை குறித்தும் தரவுகளோடும் நம்பிக்கையளிக்கும் விதத்திலும் அரசாங்கமட்டத்தில் முக்கியமான ஸ்தானத்தில் இருப்பவர்கள் யாருமே பேசியதாகக் கண்ணில்படவில்லை. ரிசர்வ் வங்கியின் கவர்னர் 'எல்லாம் சரியாகிவிடும்' என்கிறார். பிரதம பொருளாதார ஆலோசகர் 'நிறுவனங்கள் தங்கள் இழப்புகளை வெளியில் காட்டக் கூடாது' என்கிறார். இவையெல்லாம் ஆக்கப்பூர்வமான கருத்துகளாகவே இல்லையே! வலுவான அரசாங்கம் நினைத்தால் ஒரு கட்டத்தில் இத்தகைய செய்திகள் வெளியில் வராமல் வேண்டுமானால் தடுக்கலாம் ஆனால் அப்படித் தடுப்பதனால் நல்ல விளைவுகளை உண்டாக்க முடியாது. இந்தியப் பொருளாதாரத்தின் இத்தகைய போக்குதான் கவலையுற வைக்கிறது. பொருளாதாரம் பற்றி பேசக் கூடிய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பலரும் அமைதியாகிவிட்டார்கள். இந்த மெளனம் அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒருவேளை இந்தியப் பொருளாதாரம் சீட்டுக்கட்டு போல சரிய ஆரம்பித்தால் தாங்கிப் பிடிப்பார்களா என்று நடுங்க வைக்கிறது. இவ்வளவு பெரிய நாடு என்ன செய்ய முடியும்?

  பெரிய யானை ஒன்று நடமாட முடியாமல் வீழ்வதைப் போலத்தான் அது.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad