Header Ads

 • BREAKING  இந்தியாவை இருள் சூழ்கிறது - நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு


  இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பவை, நாஜி காலத்தில் ஜெர்மனியில் நடந்தவற்றை நினைவூட்டுகிறது.

  ஜனவரி 1933 இல் ஹிட்லர் ஆட்சியைப் பிடித்த பிறகு, கிட்டத்தட்ட ஜெர்மனி முழுவதும் முட்டாள்தனத்தில் முழ்கியது.

  மக்கள் 'ஹிட்லர் வாழ்க', 'வெற்றி வெற்றி', 'யூதர்கள் ஒழிக ' என்று கூச்சலிட்டனர். ஏழை மனிதர்கள் ஜாம்பிகளால் கடியுண்ட ஜாம்பிகள் ஆயினர்.

  இதையெல்லாம் இப்போது சமூக வலைதளங்களில் நீங்கள் பார்க்கமுடியும்.

  ஜெர்மனியர்கள் மிகவும் பண்பட்ட மக்கள்; அவர்களிடமிருந்து மக்ஸ் பிளாங்க், ஐன்ஸ்டீன் போன்ற சிறந்த விஞ்ஞானிகள் தோன்றியுள்ளாரகள்; கோதே, ஷில்லர் போன்ற சிறந்த எழுத்தாளர்கள்; ஹெய்ன் போன்ற சிறந்த கவிஞர்கள்; மொஸார்ட், பாக், பீத்தோவன் போன்ற சிறந்த இசைக்கலைஞர்கள்;
  மார்ட்டின் லூதர் போன்ற சிறந்த சீர்திருத்தவாதிகள்; கான்ட், நீட்சே, ஹெகல், மார்க்ஸ் போன்ற சிறந்த தத்துவவாதிகள்; லீப்னிட்ஸ், காஸ், ரைமான் போன்ற சிறந்த கணிதவியலாளர்கள்; ஃபிரடெரிக் கோமகன், பிஸ்மார்க் போன்ற சிறந்த அரசியல்வாதிகள் தோன்றியுள்ளார்கள்.

  நான் கண்ட ஒவ்வொரு ஜெர்மனியனும் நான் சந்தித்த நல்ல மனிதன் ஆவன்.

  ஆயினும்கூட, ஹிட்லர் தோன்றி, ஜெர்மனியர்கள் உயர்ந்த இனம் என்று கூறி, தங்களுடைய எல்லா தீமைகளுக்கும் யூதர்களே காரணம் என்றும் சொன்னபோது, இந்த முட்டாள்தனமான கூற்றை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.
  யூதர்கள் மீதான அட்டூழியங்களை ஒரு சிலர் மட்டுமே எதிர்த்தனர், மற்ற எல்லோரும் ஆதரித்தனர்.

  இது எப்படி நடந்தது? நிச்சயமாக ஜெர்மனியர்கள் முட்டாள்தனமான மக்கள் அல்ல, அவர்கள் இயல்பாகவே தீயவர்களும் அல்ல.
  எல்லா நாடுகளையும், மதங்களையும், இனங்களையும் சேர்ந்த 99% மக்கள் நல்லவர்கள் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். ஜெர்மனியர்கள் 6 மில்லியன் யூதர்களை எரிவாயு அறைகளுக்கு எவ்வாறு அனுப்ப முடியும்?

  எனது கருத்து இதுவே. நவீன பிரச்சாரம் மிகவும் சக்திவாய்ந்தது,
  அது மிகவும் பண்பட்ட, அறிவாளியான மக்களின் மனதைக் கூட விஷமாக்கி விடும். அக்காலத்தின் பெரும்பாலான ஜெர்மனியர்களுக்கு இதுவே நடந்தது. முதல் உலகப் போரில் தோல்வியடைந்த பின் ஜெர்மனியர்களுக்கு ஏற்பட்ட துயரமும், 1929 ஆம் ஆண்டின் பெருமந்தநிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மாபெரும் வேலையின்மையும்,
  பணவீக்கமும், பொருளாதார நெருக்கடியும் ஹிட்லரைப் போன்ற ஒரு மோசடி பேர்வழியின் தீய பிரச்சாரத்திற்கு தீனி ஆனது. ஹிட்லர் பேச்சைப் பெரும்பாலான ஜெர்மனியர்கள் காணாததைக் கண்டுவிட்டது போன்று நம்பினார்கள்.

  இப்போது பெரும்பாலான இந்தியர்களுக்கும் இதே நிலையில்தான் உள்ளனர்.
  வலதுசாரி இந்து நவ-பாசிசக் கட்சி பாஜக 2014ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய சிறுபான்மையினருக்கு (குறிப்பாக முஸ்லிம்களுக்கு) எதிராக பசுக்களைக் கொல்கின்றனர், இந்துப் பெண்களை மயக்குகின்றனர் (லவ் ஜிகாத் செய்கின்றனர்) போன்ற வெறுப்புணர்வைக் கக்கும் பேச்சுகளாலான
  பெரிய வகுப்புவாத பிரச்சாரம் இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இப்பிரச்சாரம் இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் பெரும்பாலான இந்துக்களின் மனதை விசமாக்கி விட்டது. ராம் கோயில் கட்ட வேண்டும்,
  முஸ்லிம்களைத் துடைத்தெறிய வேண்டும் போன்ற கூச்சல் கடந்த சில ஆண்டுகளில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. பாகிஸ்தானில் பாலகோட் மீதான வான்வழித் தாக்குதலும், இந்திய ஊடகங்களால் தூண்டப்பட்ட போர் வெறியும் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
  இவையெல்லாம் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை, 370 சட்டப் பிரிவை ஒழிப்பது என்பது ஒரு வித்தை மட்டுமே (இது இந்தியாவின் எந்தவொரு உண்மையான பிரச்சினையையும் தீர்க்காது). இதன் விளைவாக பெரும்பாலான இந்துக்கள்,
  அதைப் பாகிஸ்தான் எதிரிக்குக் எதிராகக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கொண்டாடும் தேசியவெறியர்களாக ஆகிவிட்டனர் (சமீபத்தில் ஹூஸ்டனில் நடந்த மோடி பேரணிகூட இதற்கு சாட்சியம்).
  இந்தியாவில் உண்மையான பிரச்சினைகள் வேலையின்மை (இந்திய அரசு அமைப்பின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது), குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு (இந்தியாவில் ஒவ்வொரு இரண்டாவது குழந்தைக்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது),
  ஏராளமான விவசாயிகள் தற்கொலைகள் (3,00,000க்கும் அதிகமானோர்), ஏறத்தாழ முறையான சுகாதார வசதியின்மை, சிறந்த கல்வியின்மை, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச்செல்லல்
  (இந்தியாவின் 135 கோடி மக்கள் தொகையில் அடித்தட்டில் உள்ள சரிபாதி மக்களின் செல்வத்தைவிட 7 இந்தியர்கள் அதிகமான செல்வமுடையவர்கள்) முதலானவை ஆகும். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் இதில் எதுவும் பேசப்படவில்லை.

  மதச்சார்பின்மை என்பது வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றில் உள்ளதைப் போன்ற தொழில்துறை சமூகத்தின் ஒரு அம்சமாகும். பெரும்பாலான ஆசிய நாடுகளைப் போலவே இது நிலப்பிரபுத்துவ அல்லது அரை நிலப்பிரபுத்துவ சமூகங்களின் அம்சமல்ல.
  நமது அரசியலமைப்பில் மதச்சார்பின்மையை மட்டும் குறிப்பிடுவது நாட்டை மதச்சார்பற்றதாக மாற்றாது. இங்கு பரவலாக உள்ள சாதிவாதமும் வகுப்புவாதமும் இந்தியா இன்னும் அரை நிலப்பிரபுத்துவமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான இந்தியர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கையுள்ளவர்,
  சுமார் 80 சதம் இந்தியர்கள் இந்துக்கள் என்பதால், அவர்கள் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு எளிதாக இரையாகின்றனர்.

  இந்தியாவில் பெரும்பாலான இந்துக்களும், பெரும்பாலான முஸ்லிம்களும் சமூகக் குழுமமாகவே வாழ்கின்றார்கள் என்பது எனது சொந்த புரிதல்.
  எனது இந்து உறவினர்கள், நண்பர்களிடையே இருக்கும்போது (முஸ்லீம் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு), நான் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை அதிகமாகக் கக்குகிறேன். ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டபோது பெரும்பாலான இந்துக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள், சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
  ஒரு பயங்கரவாதி செத்தொழிந்தான் என்று!

  வகுப்புவாதம் (சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான வெறுப்பு) பெரும்பாலான இந்துக்களிடையே எப்போதும் மறைந்துள்ளது.
  வெடித்துச் சிதற ஒரு தீப்பொறிக்காக மட்டுமே காத்திருக்கின்றது. 2014 - 2019க்கு இடையில், முஸ்லீம் விரோத, கிறிஸ்தவ விரோத அமைப்பான, ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் செலுத்தும் பாஜக வகுப்புவாத தீயை மூட்டியது.

  இப்போது பாஜகவும் அதனுடைய தலைவர் மோடியும் வியக்க வைக்கும் வெற்றி பெற்றுள்ளனர்.
  இது அவர்களைத் தேர்ந்தெடுந்த மக்களிடமிருந்து வேலைகளை உருவாக்குதல், விவசாயிகளின் துயரத்தைத் துடைத்தல், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், முறையான சுகாதாரத்தை உத்தாரவாதப்படுத்துதல், சிறந்த கல்வியை வழங்குதல் ஆகியவற்றுக்காக பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது.
  ஆனால் இதுபற்றி எந்தக் கருத்தும் அவர்களிடம் இல்லை. அதற்கு பதிலாக இந்தியாவில் என்ன நடந்தது என்றால், பொருளாதார நிலையின் முக்கு அறுபட்டுள்ளது.
  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆகக் குறைந்து, உற்பத்தித்துறை(எ.கா. வாகனத் துறை), ரியல் எஸ்டேட், மின்சாரம் உற்பத்தி முதலானவற்றில் செங்குத்தான சரிவு ஏற்பட்டு, வேலையின்மை பெருகிவருகின்றது.

  ஆகவே, இந்த உண்மையான பிரச்சினைகளை வழக்கமான முறையில் தீர்க்க முடியவில்லை என்பது மட்டுமில்லை.
  மிக மோசமடைந்து வருகின்றது. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, ஹிட்லர் யூதர் என்னும் பலியாட்டைக் கண்டுபிடித்தைப் போலவே, ஒரு பலியாடு கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவில் இந்த பலிகடா நமது முஸ்லிம்களே.
  இப்போது அவர்கள் மீது தொடர்ச்சியான அட்டூழியங்கள் நிகழும் (மேலும் இது கிறிஸ்தவர்கள் மீதும் விரிவடையும்) என்று நான் அஞ்சுகிறேன்.

  ஜெர்மனியில் அறிவியல் நாஜி சகாப்தத்தில் ஒரு இனவாதத்தைப் பெருக்கும் சொற்சிலம்பமாக ஆக்கப்பட்டதைப் போலவே,
  2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் அறிவியல் ஆனது. நாஜி ஜெர்மனியில் வரலாறு திருத்தப்பப்பட்டதைப் போலவே, 2014 ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவிலும் திருத்தப்பட்டது.
  ஜெர்மன் ஊடகங்களை கோயபல்ஸ் கைப்பற்றியது போலவே, இந்திய ஊடகங்களும் பெருமளவில் கைப்பற்றப்பட்டு விட்டன, மேலும் அவை தமது எஜமானர்களை 'பேரரசர் சீசர் வாழ்க' என முழங்குகின்றன.

  இந்தியாவை இருள் சூழ்கிறது....

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad