Header Ads

 • BREAKING  பிறப்பிடம் திரும்பும் புலம்பெயர்ந்த தமிழக தொழிலாளர்கள்.

  அனைவரும் நலமா என்று குசலம் விசாரிக்கும் காலம் இது இல்லை என்றாலும் இருப்பதற்கு ஒரு கூரை, மூன்று வேளை உண்பதற்கு உணவு , பேணிக் காக்க சொந்தங்கள் இருப்பதே ஒரு பெரிய கொடுப்பினை என்று தான் தோன்றுகிறது. #COVID19 என்ற கண்ணுக்கு தெரியாத அரக்கனால் நேரடியாக வதைபடுபவரை விட ஊரடங்கால் வதைபட்டு, வாழ்க்கையிழந்து, அல்லல்பட்டு உழல்பவரே அதிகம்.உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிர் ஒன்றை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் பாட்டைக் காணும் பொழுது நெஞ்சு அடைக்கிறது. ஆயிரக்கணக்கான மைல்களை நடந்தே அடைந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் தொடரும் மனிதச் சங்கிலையைக் காணும் போதெல்லாம் குற்ற உணர்ச்சி பிடுங்கித் தின்கிறது.பணம் இருக்குமாயின் ஒரு மிதிவண்டி வாங்கி ஊரைச் சென்றடையலாம் என்று கனவு காணும் மக்களின் நிலை மனிதத்திற்கு மிகப்பெரும் தலைகுனிவே! 

  இந்த தருணத்தில் நான் அறிந்த சில முயற்சிகளை கூற விழைகிறேன். மஹாராஷ்டிராவில் சதாரா என்னும் மாவட்டத்தில் தமிழக மாணவர்கள் சுமார் 370 பேர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். கோவிட் ஊரடங்கின் பொழுது வேலையிழந்து மூன்று வேளை உண்பதற்கு உணவு இல்லாமல் அல்லல் பட்டு வந்தனர் இவர்களின் நிலையை அறிந்தவுடன் பிரபாகரன் என்னும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி தம் நண்பர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் அவர்களுக்கு உணவு கிடைக்கப் பெறச் செய்ததோடு அவர்கள் வீடு திரும்ப வேண்டிய உதவிகளைச் செய்தார் அம்மாணவர்கள் வீடு திரும்புவதற்கு அன்பழகன் ஐ.ஏ.எஸ், சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ் மற்றும் முருகராம் ஐ.ஆர்.எஸ் ஆகியோர் ஆற்றிய உதவி மிகவும் பெரிது.
  குறிப்பாக மஹாராஷ்டிராவில் பணிபுரியும் தமிழகத்தைச் சார்ந்த அன்பழகன் ஐ.ஏ.எஸ் செய்யும் உதவி பல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக மும்பைவாழ் தமிழர்களுக்கு பேருதவியாய் இருக்கிறது. வேலையிழந்து உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு மராட்டிய அரசின் மூலமாக இதுவரை சில லட்சம் கிலோ அரிசி வழங்க வழிவகை செய்துள்ளார். மேலும் தமிழர்கள் பலர் தமிழகம் திரும்ப பல்வேறு முயற்சிகளை அரசின் துணையோடு எடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பிபிசி காணொளியில் மும்பையிலுள்ள ஆரே காட்டில் சில தமிழர்கள் சிக்கியிருக்கும் காட்சி இதயத்தை ஏனோ நசுக்கி பிழிந்தது. மேலும் திருவண்ணாமலையச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பால்கர் மாவட்டத்தில் வசை எனப்படும் ஊரில் அல்லல்படும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் கண்டு ஏதேனும் செய்திட முடியாதா என்று தோன்றியது. பின் பிரபாகரன் ஐ.ஆர்.எஸ் அவர்களை உடனே அணுகினேன். இத்தகவல்கள் அவரிடம் ஏற்கனவே உள்ளது என்றும் அதனை துறை சார்ந்த அதிகாரிகளிடம் எடுத்து செல்ல முயற்சிப்பதாகவும் கூறினார்


  நேற்றிரவு எனக்கு ஒரு தகவல் வந்து சேர்ந்தது. மிகவும் மனநிறைவைத் அளித்த செய்தி அது. மும்பை மற்றும் பால்கரில் பல இன்னல்களைச் சந்தித்து வீட்டைக் காண மாட்டோமா என்று தாயைத் தேடி தவிக்கும் பிள்ளையாய்த் துடித்தப் புலம்பெயர் தமிழர்களைச் சுமந்து கொண்டு ஒரு ரயில் வண்டி தமிழகத்தை நோக்கி கிளம்பிவிட்டது என்றும் சுமார் 1400 பேர் முதற்கட்டமாக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் பிரபாகரன் ஐ.ஆர்.எஸ் தெரிவித்தார். மேலும் சில தொடர்வண்டிகள் இயக்கப்பெற்று தமிழகம் திரும்ப விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பும் பணி துரிதமாய் நடப்பதாகவும் தெரிகிறது

  முன்பு நடந்தது போல அன்பழகன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தான் முன்னின்று பல முயற்சிகளை எடுத்து இதனை சாத்தியப்படுத்த பெருந்துணையாய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்வண்டியில் ஏறி அவர்கள் கையசைக்கும் காணொளி மிகவும் நெகிழ செய்தது இதனைச் சாத்தியப்படுத்திய எனக்குத் தெரிந்த மேற்கூறிய நல்ல உள்ளங்களுக்கும், தெரியாத பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி!!

  - Mannu

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad