Header Ads

 • BREAKING  கருணாநிதியை இன்று எப்படி மதிப்பிடுகிறீர்கள்? - தொ. பரமசிவன்.

  ஒரு காலத்தையே அவர் ஆண்டிருக்கிறார், திரும்பிப் பார்க்கும்போது 'பராசக்தி'யின் பின்னணியில் நாம் பார்த்த கருணாநிதியைப் பின்னாளில் அரசியல் களம் நீர்க்கடித்து விட்டது என்று தோன்றுகிறது. ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே மாநிலங்களை அதிகாரமே இல்லாததாக்கிவிட்ட நாட்டில் நாம் இருக்கிறோம் என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்கு வருத்தங்கள் உண்டு. ஆனால், திராவிட அரசியல் விதைகளை இந்த மண்ணில் விதைத்தத்தில் ஒருவர் அவர்.


  இன்றிலிருந்து பார்க்கும்போது திராவிட எதிர்காலம் எப்படித் தெரிகிறது?


  எனக்கு வயது 15. காரைக்குடிக்கு பெரியார் வந்திருந்தார். போய்ப் பார்த்தேன். அன்று அவர் பேசியதெல்லாம் இன்று காலை பேசியதைப் போலத் தான் இருக்கிறது. ஏன் கர்நாடகத்தில் இந்தியை எதிர்த்து இன்றைக்குப் போராடுகிறார்கள்? அதே பிரச்சனைகள் தொடர்வதால் தானே? திராவிடக் கருத்தியல் உயிர்த் துடிப்போடு இருப்பதால் தானே? இந்துத்துவ வெறியர்கள் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வன்முறையில் ஈடுபடும்போது, திராவிட நாட்டைப் பற்றிக் கேரளம் பேசுகிறது? தனிப்பட்ட சுக துக்கங்கள், பதவி, அதிகாரங்களை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு, இந்தச் சமூகத்திற்காக ஓடி உழைத்துத் தன் முழுச் சொத்துக்களையும் பொதுவாக்கிவிட்டுப் போன தலைவர் பெரியார்!


  அந்தத் தியாகம் எல்லாம் வீண் போகாது. 'தென்னை வச்சவன் தின்னுட்டு சாவான்; 'பனையை வச்சவன் பார்த்துட்டு சாவான்' என்று ஒரு பழமொழி உண்டு.

  "திராவிடம் பனை மரம். நின்று பயன் தரும்".


  திராவிட இயக்கம் பேசிய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு இன்று மதிப்பில்லையே?


  பெரியார் எங்காவது கருப்பசாமியையும், சுடலைமாடனையும் உடைத்தாரா? பிள்ளையார் சிலையைத் தான் உடைத்தார். ஏனென்றால் அது வட நாட்டு வரவு. அதற்குப் பின் அதிகார அரசியல் உள்ளது. அதிகார ஆன்மிகத்தையே அவர் எதிர்த்தார். அவருடைய பிராதான எதிரி சாதி; கடவுள் அல்ல. உண்மையான ஆன்மிகத்துக்கான வழியை மூவாயிரம் ஆண்டு பழமையான நம்முடைய நாட்டார் வழக்காறு கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல் சுரண்டல் கலாச்சாரத்துக்கு எதிரான வாழ்வியல் வழிமுறையும் நாட்டார் வழக்காற்றின் வேர்களில் தான் இருக்கிறது. அதை நோக்கிய கவனமும் இன்றைக்கு அதிகமாயிருக்கிறது. இது நல்லது தான்.


  திராவிடக் கட்சிகள் பலவீனமடைந்து வருகின்றன. வலுவான தலைவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே?


  உலகமே மூக்கில் கை வைக்கும்படி பத்து இலட்சம் மக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை எந்த இயக்கம், தலைவர்கள் நடத்தினார்? திராவிட அரசியல் என்பது இந்த மக்களின் அரசியல். இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றும் இல்லாமல் போகட்டுமே? அதனால் திராவிட அரசியல் அழிந்து விடுமா? அதிலிருந்து புதுப்புது இயங்கங்களும் தலைவர்களும் ஊற்றெடுப்பார்கள்.

  ~ தெற்கிலிருந்து ஒரு சூரியன், தொ. பரமசிவன் நேர்காணல்.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad