Header Ads

  • BREAKING



    தின்பண்டம் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு


    ஜெலட்டின்

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரைப் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் 6 வயதான விஷ்ணுதேவ். பூபதியின் அண்ணன் கங்காதரன் வீட்டிற்குச் சென்ற விஷ்னுதேவ், அங்கிருந்த ஜெலட்டின் குச்சியை தின்பண்டம் என்று நினைத்து எடுத்துக் கடித்துள்ளார். ஜெலட்டின் குச்சியை சிறுவன் கடித்ததும், அது வெடித்து சிதறியுள்ளது. இதில் சிறுவனின் வாய் சிதறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிச் சென்ற பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு, தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இதை அடுத்து சிறுவனின் உடலை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டுக்கு கொண்டு சென்ற உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமார், சிறுவனின் பெரியப்பா கங்காதரன், அவருடைய உறவினர் மோகன்ராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பருவ காலத்தில் கூட்டம், கூட்டமாக வரும் மீன்களை, பாறைகளை உடைக்க பயன்படும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்து கொத்துக்கொத்தாக பிடித்து செல்லும் சட்டவிரோத செயல்களை ஒரு சிலர் செய்து வருகின்றனர். இனப்பெருக்கத்திற்காக கரையை நோக்கி கூட்டமாக வரும் மத்தி மீன்கள் போன்றவற்றை இந்த முறையில் பிடித்து விற்பனை செய்கின்றனர். தண்ணீருக்குள் போடப்படும் வெடி வெடித்ததும் 8 முதல் 10 மீட்டர் சுற்றளவில் உள்ள மீன்கள் மயங்கி மிதக்கும். இந்த மீன்களை உடனுக்குடன் கைகூண்டு வலைகளை பயன்படுத்தி அள்ளி வந்து அவர்கள் விற்பனை செய்கின்றனர். தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தின்படி இந்த முறையில் மீன் பிடிப்பது கடும் குற்றமாகும். இந்த அடிப்படையில் மீன்களை பிடிப்பதற்காக கல் குவாரிகளுக்கு பாறைகளை உடைக்க வெடிமருந்து விற்பனை செய்யும் பாப்பாபட்டியைச் சேர்ந்த செல்வகுமாரிடம் ஜெலட்டின் குச்சியை கங்காதரன் வாங்கியுள்ளார். மீன் பிடிக்க பயன்படுத்தியது போக மீதமிருந்து ஒரு ஜெலட்டின் குச்சியை வீட்டில் வைத்திருந்ததாகவும், அதை சிறுவன் தின்பண்டம் என எடுத்துக் கடித்ததில் உடல் சிதறி உயிரிழந்ததாக கங்காதரன் தெரிவித்தார். இதை அடுத்து கங்காதரன், மோகன்ராஜ், ஜெலட்டின் குச்சியை வழக்கிய செல்வக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிறுவனின் தந்தை பூபதி, உறவினர் தமிழரசன், ஜெலட்டின் குச்சியை வைத்து கங்காதரனுடன் இணைந்து மீன்பிடித்த தமிழரசன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மீன்பிடிக்கு பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சியை பயன்படுத்தி மீன் பிடித்ததுடன், அதை அஜாக்கிரதையாக வீட்டில் வைத்ததால் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad