Header Ads

 • BREAKING  தனியாருக்கு தாரைவார்க்கப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.


  தனியார்மயமாகும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச்செயலாளர் சி.பி. கிருஷ்ணன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்.

  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

  வரலாற்றில் வங்கித் துறையில் தனியார் வங்கிகள் தோல்வியடைந்தது குறித்து ஏராளமான எடுத்துக்காட்டுகள்

  உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி தவிர மற்ற அனைத்து வங்கிகளும் 1947க்கும் 1969க்கும் இடையே தனியார் வங்கிகளாக

  இருந்தவைதான். இந்தியாவில் 559 தனியார் வங்கிகள் தோல்வி அடைந்திருக்கின்றன.

  நாடே கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், இவ்வாறு வங்கிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் கொரானா வைரஸ்

  தொற்றால் ஏற்பட்டதைவிட பயங்கர அதிர்ச்சியை அளித்துள்ளது. இதன் பின்னணி என்ன?

  இதற்கு திரு.சி.பி. கிருஷ்ணன் தந்துள்ள பதில் விளக்கம் –

  நமது நாட்டில் தனியார் வங்கிகளின் ஆதிக்கம் இருந்தவரை விவசாயம் சிறு தொழில், வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டுமானம், ஏற்றுமதி ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. பெரிய தனியார் வங்கிகள் எல்லாம் கார்ப்பரேட் வசம் இருந்தன; சென்ட்ரல் வங்கி டாடா கையில் , யூகோ வங்கி ஜி.டி.பிர்லா கையில்.. இந்த வங்கிகள் எல்லாம் தங்கள் வியாபாரத் தேவைகளுக்கு மட்டுமே கடன் கொடுத்து வந்தன.

  1960-களில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 44% அளவிற்கு பங்களிப்பு செய்த விவசாயத்துறைக்கு தனியார் வங்கிகள் வழங்கிய கடன் 2% மட்டுமே. 1969 க்கு முன்பாக 559 தனியார் வங்கிகள் திவாலாகின. அவற்றில் தாங்கள் போட்டு வைத்திருந்த வைப்புத் தொகையை பெரும்பாலான மக்கள் இழந்தனர்.

  1969 ல் அரசு வங்கிகள் உருவான பின்புதான் விவசாயம், சிறுதொழில், சுய தொழில் ஆகியவற்றுக்கு கடன் வழங்கப்பட்டது. மக்களின் சேமிப்பு பாதுகாக்கப்பட்டது. ஆனால் அதன் பின்பும் 25 தனியார் வங்கிகள் திவாலாகின. அவற்றை பொதுத்துறை வங்கிகள் தாம் தங்களோடு இணைத்துக் கொண்டு காப்பாற்றின.

  பேங்க் ஆப் தஞ்சாவூர்- இந்தியன் வங்கியுடன், பேங்க் ஆப் தமிழ்நாடு – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன், பேங்க் ஆப் கொச்சின் -ஸ்டேட் வங்கியுடன், குளோபல் டிரஸ்ட் பாங்க் – ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் உடன் இணைக்கப்பட்டன.

  தனியார் வங்கிகள் ஏற்படுத்திய அத்தனை நஷ்டத்தையும் பொதுத்துறை வங்கிகள் தாம் தாங்கின. இதன் காரணமாகவே திவாலான தனியார் வங்கிகளில் மக்களின் சேமிப்பு பணம் காப்பாற்றப்பட்டது. அவ்வங்கிகளில் பணிபுரிந்த ஊழியர்களின் வேலையும் காப்பாற்றப்பட்டது.

  1992-ல்10 புதிய தனியார் வங்கிகள், 2002-இல் 2 புதிய தனியார் வங்கிகள், 2014-இல் பாஜக ஆட்சிக்கு பின்னர் 22 புதிய தனியார் வங்கிகள் துவக்கப்பட்டன.

  இவ்வங்கிகள் எதுவும் குறைந்த வட்டியில், பிணை இல்லாமல் சாதாரண மக்களுக்கு கடன் கொடுப்பதில்லை. மாறாக புதிய சிறிய தனியார் வங்கிகள் ஆண்டுக்கு 24 சதவீதம் வரை கடனுக்கான வட்டியாக வசூலிக்கின்றன.

  யெஸ் வங்கி திவால் நிலைக்கு சென்று 2020 மார்ச் 5ஆம் தேதி அதன் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியும் தாம் அவ்வங்கியை தற்போது தூக்கி நிறுத்தி வைத்துள்ளன. யெஸ் வங்கியின் கடன்தொகை, வைப்பு தொகையை விட மிக அதிகமாக உள்ளது.

  மத்திய அரசாங்கத்தின் அத்தனை திட்டங்களையும் பொதுத்துறை வங்கிகள் தான் நிறைவேற்றுகின்றன. ஜன்தன் கணக்கு, விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு என எதுவாக இருந்தாலும் பொதுத்துறை வங்கிகள் செய்யும் சேவைக்கு பக்கத்தில் கூட தனியார் வங்கிகள் வர முடியாது.

  27.05.2020 நிலவரப்படி ஏழை மக்களுக்கான ஜன்தன் மொத்த கணக்குகள் 38.89 கோடி. இவற்றில் பொதுத்துறை வணிக மற்றும் கிராம வங்கிகள் 37.74 கோடி, ஆனால் தனியார் வங்கிகள் இணைந்து 1.25 கோடி கணக்குகள் மட்டுமே திறந்துள்ளன.

  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 51 லட்சம் கணக்குகள், ஆனால் யெஸ் வங்கி 11866 கணக்குகள் மட்டுமே திறந்துள்ளன. மத்திய அரசு தற்போது அரசு அறிவித்துள்ள 3 லட்சம் கோடி கடனில் 90% கடனை பொதுத்துறை வங்கிகள் தாம் கொடுக்க இருக்கின்றன.

  தனியார் வங்கிகள் திவாலானால் அவற்றில் மக்களின் சேமிப்பு அதிகபட்சமாக ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும். ஆனால், அரசு வங்கிகளில் மக்களின் வைப்புத்தொகை முழுமையாக பாதுகாக்கப்படும்.

  இந்தக் கோவிட் 19 நிலைமையை பயன்படுத்தி மத்திய அரசாங்கம் அரசு வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சி செய்கிறது. வங்கித்துறை கேந்திரமான துறை என்று அறிவிக்கப்பட்டால், அதிகபட்சமாக நான்கு பொதுத்துறை

  வங்கிகள் மட்டுமே மிஞ்சும். மற்றவையெல்லாம் இந்த நான்கு வங்கிகளுடன் இணைக்கப்படும் அல்லது தனியார் மயமாக்கப்படும் அல்லது ஹோல்டிங் கம்பெனிகளாக மாற்றப்படும்.

  அந்தத் திசை வழியிலேயே நிதி ஆயோக் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகிய மூன்று வங்கிகளை முதல்கட்டமாக தனியார்மயம் ஆக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்து உள்ளது.

  மத்திய அரசின் இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. - காவிரி மைந்தன்.  

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad