கொரோனா- குப்லர் ரோஸ் மாடல் உளவியல் தியரி சொல்வது என்ன?
ஒரு பெருநோயோ அல்லது நெருக்கடிச் சிக்கலோ வந்தால் அந்த வாழ்வியல் சூழல் பெருமளவு பாதிப்படையும். சான்றாக, நீரிழிவு வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். முதலில் அதை மனம் ஏற்காது, அப்போது அதை புறக்கணிப்போம், அச்சப்படுவோம், குழப்பமடைவோம், எழுச்சி அடைவோம். அடுத்தது, அந்த நோய் மீது கோபம் கொள்வோம், அதனால் மனமுறிவு ஏற்படும், பதற்றம் வரும், எரிச்சலாக இருப்போம்.
அடுத்த நிலையில்,மனச்சோர்வு ஏற்படும், அந்தத் துக்கத்தில் மூழ்கி விடுவோம், கிட்டத்தட்ட கையறுநிலைக்கு மனம் வந்து விடும். இந்தக்கட்டத்தில் மிகவும் கீழ் நிலைக்கு மனநிலை சென்றுவிடும், வாழ்க்கை விரக்தி.. வெறுப்பு.. எல்லாம் நடக்கும். மனம் அப்படியே நின்றுவிடாது. தம்மை நிலைப்படுத்திக் கொள்ள வழிகளைத் தேடும். அந்த நோயுடன் பேரம் பேசி சமரச முயற்சியில் ஈடுபடும், இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்று தேடும். அதிலிருந்து முற்றிலும் விடுபட வழி உள்ளதா என்று மனம் ஆராயும், பிறருடன் கலந்து ஆலோசிக்கவும் செய்யும். குறிப்பாக, அதே நிலை அடைந்தவருடன் பேசிப் பார்க்கும். இதற்கு எந்தத் தீர்வும் இல்லை என்பதை அறிந்தவுடன் அடுத்த நிலைக்கு மனம் தாவும்.
இந்தக் கட்டத்தில் அந்தப் பிரச்சினையோடு வாழ வழி என்ன என்பதை அறிந்து, அப்படி வாழப் பழக ஆயத்தமாகிவிடும். நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, யோகா, மாத்திரைகள் என நோயுடனே வாழ மனம் பழகிவிடும்.... நீரிழிவினை போல்.
இவ்வளவும் எதற்கு என்கிறீர்களா?
"கொரோனாவுடன் வாழப் பழகுங்கள்" என்பதல்ல. அதேநேரம், அந்நோயுடன் வாழ உடலும் மனமும் விரைவில் பழக்கப்பட்டுவிடும் என்பதே நிதர்சனம்.
- வைகை மைந்தன்.
கருத்துகள் இல்லை