Header Ads

 • BREAKING  இந்திய - சீன எல்லை மோதல்; விரிவாக அலசுகிறார் எழுத்தாளர் கார்ல் மாக்ஸ் கணபதி.

  இந்திய - சீன எல்லை மோதல் பரவலாக எல்லா ஊடகங்களிலும் விவாதிக்கப்படுகிறது. அர்னாப் நடத்துவது போன்ற “குரைப்பு மீடியாக்கள்” தொண்டை கமறக் கமற கத்தி ஓய்கின்றன. கமர்ஷியல் மீடியாக்கள் இந்தியாவிடமும் சீனாவிடமும் இருக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு, “இப்படியாக மாட்டை அந்த மரத்தில் கட்டினார்கள்” என்று பக்கத்தை ஒப்பேற்றி கதையை முடிப்பார்கள். சில பாரம்பர்ய செய்தித் தாள்கள் மற்றும் சுயேட்சையான இணைய தளங்கள் மட்டுமே நிபுணர்களின் கருத்தை வாங்கி கரிசனத்துடன் நிஜத்தைப் பதிவு செய்கின்றன. கடந்த ஜூன் பதினைந்தாம் தேதி நடந்த மோதலுக்கு முன்பே, “நிலைமை மிகவும் சிக்கலாகிக்கொண்டே வருகிறது” என்று அவை கவலையுடன் பதிவு செய்தன. மோடி தனது வழக்கமான ஆயுதமான “காடா துணியை சுருட்டி தொண்டை வரைத் திணித்துக்கொண்டு பங்கருக்குள் பதுங்கும் யுக்தி” மூலம் இதை எதிர்கொண்டதால், நடுநிலை மீடியாக்கள் கொஞ்ச நேரம் வெட்ட வெளியில் நின்று கத்திவிட்டு ஓய்ந்திருக்கின்றன. 

  சீனாவுக்கும் நமக்குமான எல்லைப் பிரச்சினை புதிதா என்றால் இல்லை. அல்லது சீனாவுக்கும் மற்ற அதன் அண்டை நாடுகளுக்குமான பிரச்சினைகள் புதிதா என்றால் அதுவும் இல்லை. எந்தெந்த நாடுகள் எல்லாம் சீனாவுக்கு அண்டை நாடுகளாக இருக்கின்றனவோ அவற்றுடன் எல்லாமே சீனாவுக்கு சிக்கல் இருக்கிறது. பாகிஸ்தான் போன்ற, “எதிரிக்கு எதிரி நண்பன்” என்று கைகோர்க்கும் கூலி நாட்டை விட்டுவிடலாம். அதுவும் பழைய செய்திதான். ஆனால் அந்தக் கூட்டணியில் நேபாளத்தையும் கொண்டு போய் சேர்த்ததுதான் ஆளும் பிஜேபி அரசின் வெளியுறவுக் கொள்கை அடைந்திருக்கும் வெற்றி. இந்த விவகாரம், வழக்கமான சீனாவின் aggression attitude என்பதைத் தாண்டி அதன் சில முக்கியமான சுபாவ மாற்றத்தைப் பறை சாற்றுகிறது. அதை இந்த வலதுசாரி அரசு எதிர்கொள்வதில் எங்ஙனம் தவறியிருக்கிறது, தவறியதோடு மட்டும் அல்லாமல் பிழையைப் பெருக்கிய அரசாகவும் இது எப்படி இருக்கிறது என்பதே இங்கு விவாதிக்கப்பட வேண்டியது.

  “கொரோனா” பரபரப்புகளையும் மீறி, இந்திய-சீன எல்லைப் பதட்டம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் கரடியாகக் கத்தியும் கூட ஆளும் அரசு அது பற்றி வாய் திறக்கவே இல்லை. இங்கு அரசு கையாளும் சர்வாதிகாரப் போக்கு குறித்து வேறு ஒரு இடத்தில் விரிவாகப் பேசுவோம். ஏனெனில் எதிர்க் கட்சிகளும் அரசின் உறுப்புகள்தான் என்பதே நவீன ஜனநாயகம் வந்தடைந்திருக்கும் இடம். நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினை என்று இல்லாது மற்ற எல்லா முடிவுகளிலும், தங்களுக்குப் பெரும்பான்மை இருந்தாலும்  கூட, எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தை எட்டுவது ஆளும் அரசுகளின் கடமை என்பது தேர்தல் ஜனநாயக அரசின் முக்கிய விழுமியங்களில் ஒன்று. ஆளும் வலதுசாரி அரசு எந்த விஷயத்திலும் இதை மதிக்கவே இல்லை. இந்த எல்லை விவகாரத்திலும் அதுவே நடந்தது. கூடுதலாக, அதைப் பொதுவெளியில் விவாதத்திற்குக் கொண்டு வரும் ராகுல் காந்தி போன்ற எதிர்க்கட்சியினரை, அவர்கள் ஏதோ இராணுவ ரகசியத்தை வெளிப்படுத்திவிட்டவர்கள் போல விமர்சித்து தனிமைப்படுத்த அரசு முயன்றது. (இந்த தனிமைப்படுத்தும் யுக்திக்குப் பின்னால் நுணுக்கமான அரசியல் இருக்கிறது. அதைக் கட்டுரையின் பின்பகுதியில் விரிவாகப் பார்ப்போம்) இந்த உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கையில், எல்லையில் நிலைமை கைமீறி போய்க்கொண்டிருந்தது.

  மிக சுருக்கமாக அதை சொல்லிவிட்டு கடந்துவிடுகிறேன். தங்களது வழக்கமான நிலைகளில் இருந்து 45-50 சதுர கிலோமீட்டர்கள் வரை நகர்ந்து வந்து, இந்தியா தனது patrolling வரம்பிற்குள் வைத்திருந்த இடத்தை சீனத் துருப்புகள் ஆக்கிரமித்திருக்கின்றன. இந்தியா இதை மறுத்துக்கொண்டே இருந்தாலும் இதுதான் உண்மை என்று ராணுவத்தில் பணியாற்றிய நிபுனர்கள் எழுதுகிறார்கள். இந்திய வீரர்கள் இருபது பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பத்து பேர் பிடித்துச் செல்லப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சீனாவின் நோக்கத்தைக் கணிப்பதில் நமது அரசியல் தலைமை பெரிய பிழையை செய்துவிட்டிருக்கிறது என்பதெல்லாம் இன்று உறுதி செய்யப்பட்ட செய்தியாக செய்திப் பரப்பை ஆக்கிரமிக்கிறது. சீனத் தரப்பில் நாற்பதுக்கு மேற்பட்ட உயிரிழப்புகள் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வருகின்றன. இதை நம்புவதற்கு இப்போது வரைக்கும் முகாந்திரம் இல்லை. கடும் மவுனத்தைக் கடைபிடிக்கும் அரசு, இப்படி சந்தேகம் தெரிவிக்கும் ஒரு சிலரை தமது கூலி பிரச்சார அமைப்புகளைக் கொண்டு தேச விரோதிகள் என்று கட்டம் கட்டுவதில் தீவிரமாக இருக்கிறது. 

  இந்த ராணுவம் சார்ந்த தந்திரங்கள், அதன் நகர்வுகளில் ஏற்பட்ட பிழைகள் போன்றவை குறித்து நிறைய எழுதப்படுவதால், நாம் இந்த விவகாரங்களின் பின்னணியின் “மோடியின் அரசியல் இருப்பு” குறித்தும் “அவரது பாத்திரம்” பற்றியும் அந்த உருவாக்கத்தின் பின்னுள்ள சித்தாந்தம் குறித்தும் கூடுதலாகப் பேசலாம். ஏனெனில் முக்கியமான இந்த அம்சம் குறித்து யாரும் பேசவில்லை. அப்படி ஒரு விவாதம் எழுவதை வலதுசாரி அமைப்புகள் மிகத் தந்திரமாக கட்டுப்படுத்துகின்றன. சுயேட்சையான இதழ்கள் கூட ஒருவித முற்றுகைக்குள் வைக்கப்படுகின்றன. “சீனப் பொருட்கள் புறக்கணிப்பு” எனும் கோமாளிக் கூத்துகள் மக்கள் முன்னால்  கிளுகிளுப்பைகளைப் போல ஆட்டப்படுவதால், அதன் பின்னால் எல்லோரும் ஓடி, மைய விவாதத்தைத் தவற விட்டுவிடுகிறார்கள். இப்படி “கவனச் சிதறல்” ஏற்படுத்துவதை ஒரு அரசியல் வழிமுறையாகவே வலதுசாரிகள் வைத்திருப்பதால் இதை எதிர்கொள்வது சிக்கலுக்குரியதாக இருக்கிறது.

  பல பத்தாண்டுகளுக்குப் பிறகு சீன ராணுவத்தின் பிடியில் இவ்வளவு இந்திய வீரர்கள் கொல்லப்படுவது முதல் முறையாக நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டையே கொந்தளிப்பில் வைத்திருக்கும் “Article 370”  நீக்கம் மற்றும் “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா” போன்ற விவகாரங்கள் இந்த கொரோனாவால் மட்டுப்பட்டிருக்கின்றனவே ஒழிய அவை முழுவதும் நீங்கி விடவில்லை. காஷ்மீர் மற்றும்  லடாக் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களை பல பத்தாண்டுகளாக காங்கிரஸ் அரசு கைவிட்டிருந்தது, அதை நாங்கள் வந்தால்தான் சரி செய்வோம் என்பது RSS ன் நீண்ட கால செயல்திட்டங்களில் ஒன்று. காங்கிரசின் செயல்பாடுகளில் போதாமை இல்லையா என்று கேட்டால் இருந்ததுதான். அதற்கான விலையை நாம் கொடுத்துக்கொண்டேதான் வந்திருக்கிறோம். ஆனால் இந்த வலதுசாரி அரசு, அந்தக் குறைகளைக் களைந்திருக்கிறதா, அல்லது அந்த திசையில் நடக்கவாவது செய்திருக்கிறதா என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வி. இல்லை என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்த அரசு உருவாக்கி உலவ விடும் false narratives ல் இருந்து நாம் முதலில் நம்மை அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் கொஞ்சமாவது யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். இந்த மன அமைப்புக்கு நம்மை தயார்படுத்திக்கொண்டால்தான் நாம் இந்த விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும். அதற்கு முதல் நிபந்தனை, “மோடி என்கிற கோமாளி பிம்பத்தை” அதன் சுயத்தோடு நாம் புரிந்துகொள்வது மட்டுமே. 

  கேட்பதற்குக் கொஞ்சம் கச்சாவாக இருந்தாலும், இந்த ஆரம்ப கட்ட அடித்தளத்தை  நீங்கள் அமைத்துக்கொள்ளவில்லை என்றால், இந்திய சமூகத்தின் மீது வலதுசாரிகள் அமைத்திருக்கிற முற்றுகையை நீங்கள் புரிந்துகொள்ளமுடியாது. அதன் உபவிளைவாக வருகிற, பொருளியல் சீரழிவுகள், சமூகக் கொந்தளிப்புகள், எல்லைப் பிரச்சினைகள் போன்றவற்றை நீங்கள் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தோடு புரிந்துகொள்ளமுடியாது. அடுத்தடுத்த நடக்கபோகும் இழப்புகளையும் தடுக்க முடியாது. 

  நிறுவன மேலாண்மையில் ஒரு Thump rule உண்டு. “நீங்கள் error களைக் கையாள முடியும், Surprise களை அல்ல” என்பதே அது. திட்டமிடுவதின் அவசியம் குறித்த பாலபாடம் அது. திட்டமிடுவது என்றால் நமது பலவீனங்களை மதிப்பிடுவதுதான். ஏனெனில் அவைதான் களத்தில் எதிர்பாராத அதிர்ச்சிகளாக உருமாறி நம்முன்னால் நிற்கும். (உதாரணத்துக்கு demonetization விவகாரத்தில் சிறிய வகை நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு வரும் என்பது error. அச்சடிக்கப்படும் நோட்டை மெஷினில் பொருத்தமுடியாமல் போகும் என்பதும் error தான். ஆனால் வங்கி அதிகாரிகள் கொள்ளைக்காரர்களாக மாறி பேரத்தில் ஈடுபடுவார்கள் என்பது Surprise) வலதுசாரிகள் அரசியலில் நிகழ்த்துவது முழுக்க  எதிர்பாரா அதிர்ச்சிகளை மக்கள் தலையில் கொட்டுவதுதான். இங்கு நான் சொல்வது, ஒரு சமூகமாக நாம் அடையும் எதிர்பாராத அதிர்ச்சிகள் அல்ல, மாறாக ஒரு அரசாக மேலாண்மையில் தோற்கும் அரசு அடையும் எதிர்பாராத அதிர்ச்சியை சுட்டுகிறேன். அதுவே மிகவும் ஆபத்தானது. இப்படி எத்தனை முறை நடந்தாலும், அது அரசின் தோல்வியாக அடையாளம் காணப்பட்டு, சேதாரமாக  மாறாமல் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.  இங்குதான் அவர்கள் மோடி எனும் சிரிப்பு போலீஸை எப்படி சாகச வீரரைப் போல சந்தைப்படுத்தப்படுகிறார்கள், அதைக்கொண்டு தமது தோல்விகளை மடைமாற்றுகிறார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயமாகிறது.

  உதாரணத்துக்கு, சீனாவுடனான நல்லுறவு குறித்த நமது பிரயத்தனத்தையே எடுத்துக் கொள்வோம். சீன அதிபர் மாமல்லபுரம் வந்தபோது, அவரை உபசரித்த மோடியின் உடல் மொழியில் நீங்கள் கண்டது ஒரு அண்டை நாட்டின் பிரதமருக்கான மாண்பா அல்லது முடுக்கிவிடப்பட்ட பொம்மையின் வழிசலா? ஜின்பிங் வந்த அன்று,  அங்கு கருப்புக் கொடி காட்ட வந்த ஒரு திபெத்திய அகதியை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவுக்குள் போட்டுக்கொண்டு விரைந்த போலீஸ் அணுமுறையில் வெளிப்பட்டது என்ன? அதன் மூலம் இந்தியா  என்ன மாதிரியான செய்தியை உலகுக்குச் சொன்னது? ஆனால் அதே இந்திய அரசு, அமித்ஷாவின் வழியாக பாராளுமன்றத்தில், நாங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரையும் கைப்பற்றுவோம், சீனா கைப்பற்றி வைத்திருக்கும் அக்ஸா சின்னையும் நெருங்குவோம் என்று சூளுரைத்தது. இது என்ன மாதிரியான ராஜதந்திரம்? இந்தியா வெளிப்படுத்தும் உண்மையான முகம் என்ன? அதில் மோடி நடிக்கும் பாத்திரம் என்ன?

  இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும்  சீனா எப்படி எதிர்கொண்டது என்று பார்ப்போம். அப்போதுதான் இந்த ஈவன்ட் மேனேஜரின் தாத்பர்யம் புரியும்.  Article 370 நீக்கப்பட்ட நாளில் இருந்து, அதை வெளிப்படையாகக் கண்டித்தபடியே இருக்கிறது சீனா. இது எங்களது உள்நாட்டுப் பிரச்சினை, நீங்கள் அது பற்றி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டனம் தெரிவித்திருக்க வேண்டிய இந்தியா, மோடியை வைத்து டூரிஸ்ட் கைட் வேலை பார்க்கிறது. இதன் மறுபக்கம் சீன அரசியல் நாளுக்கு நாள் வன்முறையானதாக மாறிக்கொண்டே இருக்கிறது. திபெத்தை கிட்டத்தட்ட செரித்து முடித்திருக்கிறது. தைவானை அது எங்களது ஒரு பிராந்தியம் மட்டுமே என்று சொல்கிறது. ஆனால் தைவான் பற்றியோ, திபெத் பற்றியோ மறந்தும் கூட இந்தியா வாய் திறப்பதில்லை. திபெத்தின் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை வெளிப்படையாக ஆதரித்து சீனாவை எதிர்த்து நின்ற வரலாறு கொண்டது இந்தியா. எந்த இந்தியா? இவர்கள் சொல்லும் அதே பலவீனமான காங்கிரஸ் இந்தியாதான். இன்று என்ன நிலைமை? சீனாவின் கொடூர சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள முடியாமல் சிதறிக் கிடக்கும் திபெத் அகதி ஒருவன் அடையாள கருப்புக் கொடி காட்டவந்தால் அவனை மூட்டையாகக் கட்டி அப்புறப்படுத்தும் நிலையில் இருக்கிறது இந்தியாவின் திபெத் நிலைப்பாடு. இப்போது உங்களுக்கு ஒரு எளிமையான கேள்வி தோன்ற வேண்டும். சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக முனகக் கூட திராணியற்ற இந்தியா அதாவது மோடி – அவர்தானே பிரதம நடிகர் பாவம் – அக்ஸாய் சின்னை மீட்போம் என்று துணை நடிகரை வைத்து பாராளுமன்றத்தில் சவால் விடுவதில் எதாவது பொருள் இருக்கிறதா? 

  இந்த முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது பாருங்கள். சீன விவகாரத்தில் காங்கிரஸ் தவறிழைத்து விட்டது என்றும், சீனாவுக்கு எதிரான காத்திரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் திராணி எங்களிடம் மட்டுமே உள்ளது என்றும் மார்தட்டுகிற வலதுசாரி அரசு, தமது ராணுவ வீரர்கள் இருபது பேரை சாகக் கொடுத்த பிறகும் கூட, பொந்துக்குள் இருந்தபடியே பேசுகிறதே ஏன்? இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் சீனா என்கிற பெயரைக் கூட சுட்டாமல், இறந்து போன வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறார். மோடியிடம் அதுவும் இல்லை, அடிபட்டவன் முனகுவதைப் போன்ற ஒரு உதார் அறிக்கை. அவனமானமாக இருக்கிறது. 

  இதன் மூலம் இந்தியா உருவாக்க முனையும் சித்திரம்தான் என்ன? இத்தகைய விவகாரங்களில் பிரதமரின் நிஜமான பாத்திரம்தான் என்ன? மோடியை ஒரு ஈவன்ட் மேனேஜர் மாதிரி சுருக்கிவிட்டு, அவரது பின்னால், தனது செயல்திட்டங்களை வலதுசாரி தலைமை செயல்படுத்த முனைகிறதா? இப்படி சொன்னால், நடந்த தோல்விகளில் இருந்து மோடியைத் தப்புவிப்பதாக ஆகும் என்று சொல்லலாம். அப்படி இல்லை என்பதே என் கருத்து. 

  மோடியின் போதாமைகளை எதிர்க்கட்சிகள் ஒரு அரசியல் விவாதமாக வளர்த்தெடுக்க வேண்டும். மோடியை வில்லனாக முன்வைத்தால், அது எதிர்மறை விளைவுகளைத் தரும் என்று, ஜெயராம் ரமேஷ் போன்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களே சொன்னார்கள் நினைவிருக்கிறதா? நான் சொல்வது, மோடியை வில்லனாக்குவது அல்ல. மாறாக தன்னைக் கோமாளி என்று அம்பலப்படுத்தும் தரவுகளை மோடியே கொடுத்துக்கொண்டிருக்கிறார், அதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த வேண்டும் என்றுதான். 

  தனது குறைபாடுகளை, போதாமைகளை ஆளுமைப் பண்பாக மாற்றி நடிப்பதில் அவர் வெற்றியடைகிறார். அந்த வெற்று பிம்பத்தின் முன்னால் எதிர்க்கட்சிகள் தங்களது வாட்களை சுழற்றிக் கொண்டிருக்கிறன. அது வீண். தங்களது அரசியல் சொல்லாடல்களை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தில் அவை இருக்கின்றன. ரஃபேல் விவகாரத்தை முன்னிட்டு, மோடியைத் திருடர் என்று சொல்லும் “mera pm chor hai” எனும் பிரச்சார யுக்தி வெற்றிடையைவில்லை என்பதற்குக் காரணம், அதன் மறுபக்கத்தில் அவரைத் திருடும் அளவுக்குத் திறனுள்ளவராக அது கட்டமைத்துவிட்டது என்பதும்தான். யதார்த்தத்தில் அத்தகைய திறன் கூட இல்லாத, எந்த தலைமைப் பண்பும் அற்ற உள்ளீடற்றவர் அவர் என்பதே இங்கு அம்பலப்படுத்தப்பட வேண்டியது. ஆனால் நகை முரணாக அவரோ தன் மீதான விமர்சனங்களை தனது மகுடத்தில் இன்னொரு சிறகாக மாற்றுகிறார். ஒரு நார்சிஸ்டை நாம் கனவான் என்று நம்பும் அபத்தத்துக்கு உள்ளாகிறோம். அவர் ஒரு ஜிகினாவாக நம்முன் கடைவிரிக்கப்படுகிறார்.

  வலதுசாரிகளின் இந்த யுக்தியை, அவர்கள் மன்மோகன் சிங்கை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை வைத்துப் புரிந்துகொள்ளலாம். அவரைத் திறனற்றவர் என்றும் பலவீனமானவர் என்று அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். இந்தியாவின் பொது உளவியலான “ஆண் மையவாதப்” பின்னணியில் வைத்து பலவீனமான மன்மோகன் சிங், 56 இன்ச் மார்பு கொண்ட மோடி போன்ற சொல்லாடல்களின் அரசியல் வெற்றியை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நிஜம் என்ன? உலகப் பெருமந்தத்தின் போது, அது இந்தியாவைப் புரட்டிப் போடாத அளவுக்கு தற்காத்த அவர் பலவீனமான பிரதமர் என்றும், இன்று இந்தியப் பொருளாதாரமே தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிற போது, பலம் பொருந்திய பிரதமராக மோடியும் இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? இந்த இருமையை வலது சாரிகள் மிக லாவகமாகக் கையாள்கிறார்கள் என்பதுதான் காரணம். ஜோடனையான கோஷங்களை வேகவேகமாக உருவாக்கி மக்கள் முன்னால் கொட்டுகிறார்கள். 

  இது நிகழ்வதற்கு தங்களது ஆட்சிக்காலத்தில் காங்கிரசும் உதவியது. மன்மோகன் ஒரு பிரதமர் மெட்டீரியல் என்பதை நான் இப்போதும் ஏற்கவில்லை. அதன் பொருள் அவர் திறன் குன்றியவரோ பலவீனமானவரோ அல்ல.  ராகுல் அப்போது நிகழ்த்திக்கொண்டிருந்தது வெற்று சாகசக்காரனின் நடனம் மட்டுமே. சோனியா, மன்மோகன், ராகுல் கூட்டணி அன்று அல்லும் பகலும் மோடிக்காகவே உழைத்தார்கள். சமீபத்திய பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகான  ராகுலின் செயல்பாடுகள் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தது பாருங்கள். வலுவற்ற எதிர்க்கட்சிகள் எனும் விமர்சனத்தை சுமக்க வேண்டியது வலுவற்ற காங்கிரஸ்தான். “நவீன அரசு” எனும் முகத்தை வழங்கும் சாத்தியம் உள்ள காங்கிரஸ், சோம்பலாக முடங்கிக்கிடக்கிறது. அது பிஜேபிக்கு தங்களது மூடத்தனத்தை விரிவாக்கும் ஊக்கத்தை வழங்குகிறது. கள அரசியலுக்கும் டிவிட் அரசியலுக்குமான எல்லைகள் சுருங்கிக்கொண்டே வருகின்றன.

  இந்த அரசை  எதிர்கொள்வதில்,  எதிர்க்கட்சிகள் முன் உள்ள தேர்வு என்ன? தேர்வு என்பதை விட அதை சவால் என்றே சொல்லலாம். இந்த அரசு, தங்களது உளுத்துப் போன நிலபிரபுத்துவ மதிப்பீடுகளின் உள்ளே வைத்து  தமது தோல்விகளை மறைத்துக்கொள்கிறது. இன்று எல்லையில் அடைந்திருக்கும் தோல்வியை, மோடியின் தோல்வியாக நீங்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால், அவர்கள் உங்களை  “ராணுவத்தின் கீர்த்தியை அபவாதம் செய்யும் தேசவிரோதிகள்” என்று எதிர்கொள்வார்கள். இறந்து போன ராணுவ வீரர்களுக்கு விளக்கு ஏற்றி வைத்து வணங்கும் பாரம்பரியமான ஒரு இந்து மனதையும்  நீங்கள் பகைத்துக் கொள்ள நேரிடும். பண்பாட்டையும் அரசியலையும் ஒன்றாகப் போட்டு குழப்பி வைப்பதில் அவர்கள் வெற்றியடைகிறார்கள். 

  உலகின் ஒரே இந்து நாடு நேபாளம், அதனுடன் கூட உங்களுக்கு நல்லுறவைப் பேண முடியவில்லையே என்று நீங்கள் கேட்பதற்கு முன்னால், “கம்யூனிஸ நேபாளம்” என்று கண்டனம் தெரிவிக்கும் ஹெச், ராஜாவை நீங்கள் பைத்தியம் என்றா நினைக்கிறீர்கள்? இன்று இந்தியாவின் நவீன அரசியல் எதிர்கொள்ளும் பிரதான சிக்கல் இதுதான். வெறும் கலாச்சார போதகர்களின் கையில் அதிகாரம் சென்று சேர்கிறபோது தேசம் அடையும் தோல்விகளே இப்போது நாம் காண்பது. 

  சீனாவின்  சிக்கல்களில் ஒன்று  அவர்கள்  சிறுபான்மை Uyhgur முஸ்லிம்கள் மீது ஏவும் அடக்குமுறையும் அது சர்வதேசப் பரப்பில் அவர்களுக்கு ஏற்படுத்தும் கெட்டப்பெயரும். ஆனாலும் பாருங்கள், அவர்கள் காஷ்மீர் குறித்து வெளிப்படையாக இந்தியாவைக் கண்டிக்கிறார்கள். ஒரு பேச்சுக்காவது நமது பிரதமர் தோழமை சுட்டுதலாக Uyhgur பற்றிக் கேட்க முடியுமா? அப்படி ஒரு தார்மீகம்தான் உண்டா அவருக்கு?

  இன்று இந்தியாவின்  priority, எல்லையோ தேசப் பெருமிதமோ அல்ல. ஆனால் இதை எந்த எதிர்க்கட்சியும் பேச முடியாது. உங்கள் கையில் எல்லையில் மாண்டு போன ராணுவ வீரர்களின் ரத்தக் கறை இருக்கிறது என்று அவர்கள் சொல்வதற்குள், குங்குமத்தைக் குழைத்துக்கொண்டு குத்து விளக்கு முன்னால் குந்திவிடுகிறார் அரசியல் மதகுரு!

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad