Header Ads

 • BREAKING  காஷ்மீரும் சீனமும் - எல்லையில் என்ன நடக்கிறது?

  இந்திய வரலாற்றிலேயே மிக அதிகமாக சீனத்துக்கு அரசு முறை பயணம் செய்த பிரதமர், மோடி. பிரதமராக 5 முறை, குஜராத் முதல்வராக 4 முறை.

  ஆனால், மோடியின் ஆட்சியில் தான், சீனப்போருக்கு பிறகான மிக அதிகமான எல்லைப்பதற்றத்தை சீனத்துடன் இந்தியா சந்திக்கிறது. இவ்வளவு சந்திப்புகளுக்குப் பிறகும், சீனாவோடு சுமுகமான சூழலை மோடியால் ஏற்படுத்த முடியவில்லை. ஏன்?

  2017 டோக் லாம் பிரச்னைக்கு பிறகு, 2018 ஏப்ரலில் சீனம் சென்ற மோடி, சீன அதிபருடன் 2 நாள் 'Informal summit'-ல் கலந்துகொண்டார். இந்தியாவில் எந்த பிரதமரும் சீனாவுடன் இத்தகைய Informal summitல் ஈடுபட்டதில்லை. இதுவே முதல்முறை.

  இந்த Informal summitல் இருநாட்டு ராணுவ நிலைகள் தொடர்பான தகவல் பரிமாற்றம் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. Doklam standoff-ன் முக்கிய காரணி, தகவல் பரிமாற்ற பிரச்னையாக கருதப்பட்டு, அதன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

  காஷ்மீர் அந்தஸ்து நீக்கத்துக்குப் பிறகு, இந்தியாவுடனான ராணுவ தகவல் ஒத்துழைப்பை தூக்கி விட்டத்தில் போடும் முடிவுக்கு வந்தது சீனா. தொடர்ச்சியாக சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் ஆதரவு போக்கை சீனா கையில் எடுத்தது.

  இன்னொருபுறம், சீனாவோடு வணிகம் செய்ய பாஜக அரசு ஒப்பந்தங்கள் போடும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், சீனப்பொருட்களை தவிர்ப்போம் என ஆர்.எஸ்.எஸும், பாஜகவும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த முரண்பாடு, சீனாவை எரிச்சலூட்டியிருக்கிறது.

  எல்லையில் நிலைமை தீவிரமடைந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையிலும், சீனாவை வீழ்த்த வேண்டும் என்றால், சீனப்பொருட்களைத் தவிர்த்து உள்நாட்டுப் பொருட்களை வாங்க வேண்டும், எல்லையில் மின்சார வேலி அமைக்க வேண்டும் என கார்ட்டூன் கனவுகளை விதைத்துக் கொண்டிருக்கின்றன வட இந்திய ஊடகங்கள்.

  சீனாவை எப்படி கையாள்வது என ஆர்.எஸ்.எஸ்-க்கும், பாஜகவின் இன்னொரு தரப்புக்கும் இடையில் இருக்கும் முரண்பாடே, சீனா உறவில் இப்போதைய சிக்கல்களின் ஆதாரம். இந்த முரண்பாடே, இப்போது சீனம் காட்டும் 'ஆக்ரோஷத்திற்கும்' முக்கிய காரணம் என்றே ராஜுய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  standoff பதற்றத்துக்குரியதாக மாறியதில் காஷ்மீர் முக்கிய பங்கு வகிக்கிறது. காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த ஒரே வாரத்தில், 1984 முதல் பல நூறு உயிர்களையும், கோடிகளையும் கொட்டி காத்துவந்த சியாச்சின் முகடு பகுதிகளை சுற்றுலாவுக்குத் திறந்துவிட்டது மத்திய அரசு. காஷ்மீரை அந்தஸ்து நீக்கம் செய்ததை சீனா கண்டித்தது. அடுத்த சில தினங்களில் சீன - பாகிஸ்தான் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் சந்திப்பு நடந்தது. அப்போதே இந்தியா சுதாரித்திருக்க வேண்டும். இப்போது சியாச்சின் முகட்டின் ஒருபக்கம் பாகிஸ்தான், மறுபக்கம் சீனா என இந்தியா நெருக்கப்பட்டிருக்கிறது என்கிறார் முன்னாள் ராணுவ அதிகாரி ப்ரவீன் ஷாநே.

  சீனம் எப்போதுமே உளவியல் ரீதியாக எதிரிகளை அச்சுறுத்தும். எண்ணிக்கை பலம், ஆயுத பலம், தளவாட பலம் குறித்த கட்டுக்கதைகளை உருவாக்கி உளவியல் ரீதியாக எதிரியை நடுக்குறச் செய்யும். சீனப்போர், டோக்லாம், இப்போது லடாக் எல்லாவற்றிலும் அதுதான்உத்தி

  ஆனால், டோக்லாம் பிரச்னையில் இந்தியா உடனடியாக எதிர்வினை ஆற்றியது. காரணம், பூடான் தந்த 'Moral ground support'. அதனால், சீனம் பின்வாங்கியது. கிட்டத்தட்ட இந்தியாவின் வெற்றி என்றே அதை சொல்லலாம்.

  ஆனால், இம்முறை சீன படைகள் பின்வாங்கும் மனநிலையிலேயே இல்லை என்கிறது செய்திகள். காரணம், டோக்லாம் பிரச்னை என்பது சீனாவின் சாலை உருவாக்கத்தை ஒட்டி எழுந்தது. ஆனால், இம்முறை சீனா தனக்குத் தேவையான கட்டமைப்புகளை கடந்த இரண்டரை ஆண்டுகளில் உருவாக்கிவிட்டது என்கிறார்கள். 


  இந்தியாவிடமும் போதுமான கட்டமைப்பு உள்ளது. கால்வன் பள்ளத்தாக்கு அருகே எல்லைக்கு பக்கவாட்டில் முக்கிய பாலத்தை இந்தியா கட்டியுள்ளது. வித்யாசம், சீன கட்டமைப்புகள் சொந்தத்தயாரிப்பு. நம்முடையவை இறக்குமதிகள்.

  ஆனால், இம்முறை இந்தியாவின் உடனடி எதிர்வினை தாமதமாகியிருக்கிறது. ஏப்ரல் 19ம் தேதியே எல்லையில் சீன ராணுவ convey குவிக்கப்பட்டு வருவதை உளவுத்துறை மத்திய அரசுக்கு சொன்னது. ஆனால், நிலைமை குறித்து 1 மாதம் கழித்து, மே 18 அன்று தான் பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியது. மே 5 லடாக்கில் 250 இந்திய - சீன வீரர்கள் இரும்பு ராடுகள் மற்றும் தடிகளோடு 'கைகலப்பில்' ஈடுபட்ட செய்தி வந்தது. ஆனால், அது தனிப்பட்ட நிகழ்வு என இந்தியத் தரப்பில் ஊடகங்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால், மே 8 அன்று பழைய நிலைக்குத் திரும்ப தொலைபேசி வழியாக கோரிக்கை விடுத்தார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர். இந்திய கோரிக்கைக்கு மறுநாள் சிக்கிம் எல்லையில், பாங்க்காங்க் சுவோ பகுதியில் மீண்டும் கைகலப்பு நடந்தது. இந்தியாவின் வெளிப்படைத்தன்மையின்மை, இந்தியாவுக்கே சிக்கலைத் தருகிறது.

  டோக்லாம் பிரச்னை போல ஒரு இடத்தை மையப்படுத்தி இப்போதைய சிக்கல் இல்லை. காஷ்மீரில் சியாச்சின் முகடு அடங்கிய லடாக் பகுதி, சிக்கிம் எல்லை , அக்சய் சின் பகுதியையொட்டிய கால்வன் பள்ளத்தாக்கு என மூன்று பகுதிகளில் சிக்கல் எழுந்துள்ளது. மூன்று பகுதிகளிலும் இந்தியாவை நெருக்குகிறது சீனா.

  சீனா தன் கட்டமைப்புகளை பெருக்கிக் கொண்டிருந்த காலத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர், நிர்மலா சீத்தாராமன். சீனா தன் கட்டமைப்புகளை வலுப்படுத்தியுள்ளதை நிர்மலாவே ஒருமுறை ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  காஷ்மீரை ஒரு வணிக பூமியாக பாஜக அரசு பார்க்கிறது. காஷ்மீரின் மாநில அந்தஸ்த்தை நீக்கிய உடனேயே, மிக மிக முக்கிய இடமான சியாச்சின் பகுதியை சுற்றுலாவுக்கு அனுமதித்தது அதன் முக்கிய கட்டம். சுற்றுலா, போக்குவரத்து என வணிகத்துக்கு பாஜக அரசு திட்டமிடுகிறது. மாநில அந்தஸ்து நீக்கம் நடைபெற்ற சில தினங்களில் அதானி சில முதலீட்டு முயற்சிகளில் இறங்கினார். ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்கள் பல்லாயிரம் கோடியை கொட்டத்தயாராக இருப்பதாக பாஜக ஆதரவு ஊடகங்கள் செய்தி வாசித்தன. காஷ்மீர் சொர்க்க பூமியாகப் போகிறது என பீடில் வாசிக்கப்பட்டது.

  இப்போதுகூட, ஊரடங்கு கால தனியார்மயமாக்க அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்த காஷ்மீரில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  ஆனால், எல்லா காலத்திலும் காஷ்மீர் எல்லைச் சிக்கலுக்குரிய பிரச்னை என சீனா நிறுவ நினைக்கிறது. வணிகத்துக்குத் தேவையான அமைதியை சீனா, பாகிஸ்தானோடு இணைந்து கேள்விக்குரியதாக்குகிறது.

  பாஜகவின் வணிக விருப்பத்துக்கும், சீனத்தின் நில ஆசைக்கும் இடையில் சிதைந்துகொண்டிருக்கிறது காஷ்மீரின் வரலாறும், வாழ்க்கையும். 

      - பத்திரிகையாளர் விவேக் கனநாதன்

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad