Header Ads

  • BREAKING



    பண்டைய அறிவியல் உண்மையில் அறிவியலா?


    சில நாட்களுக்கு முன் ஈர்ப்பு விசையின் தந்தை உண்மையில் நியூட்டன் தான என சந்தேகம் எழுப்பி ஒரு காணொளி வந்திருந்தது. அது பலரிடம் பல விமர்சனங்களை உண்டாக்கியது. அது போன்ற சந்தேகங்களுக்கு ஒரு வார்த்தையில் பதிலளிப்பது வரலாற்றை பழிப்பது போன்ற தொனியில் தான் இருக்கும். இது போன்ற வரலாற்று அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு விரிவான பதிலளிப்பது, உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புலப்படுத்தும்.

    முதலில் நவீன அறிவியலின் பண்புகள் என்னென்ன?

    நவீன அறிவியல், கூர்நோக்கு தரவுகள் (Observations) அடிப்படையிலானது.

    அந்த கூர்நோக்கு தரவுகள் ஒரு அறிவியல் கூற்றின் நிகழ்கால உதாரணமாக இருக்கும்.

    அடுத்த கட்டமாக அந்த தரவுகள் கணித சூத்திர அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கும். அவ்வாறு நிறுவப்பட்ட அறிவியல் சூத்திரங்கள் பேரண்டத்தின் அனைத்து இடங்களுக்கும் பொருந்தி போகும். பேரண்டத்தின் எந்த பகுதியிலும் அந்த அறிவியல் சூத்திரங்களை உபயோகப்படுத்தி தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்க முடியும். உதாரணம் அண்டவெளியில் பயணிக்கும் விண்கலங்கள்.

    மூன்றாவது, அறிவியலானது, அறிவுபூர்வமான தரவுகளுடன் கூடிய எதிர்க்கருத்துகளுக்கு இடமளிக்கும். இதன் மூலம் தொடர் சோதனைகள் வழியே அறிவியல் தன்னை தானே வளர்த்துக்கொள்ளும்.

    நான்காவது, நவீன அறிவியலும் தொழிநுட்பமும் இணைந்து, அறிவியல் கோட்பாடுகளை பல நூறுகோடி முறைகள் மீள்உருவாக்கம் செய்துள்ளன, உதாரணம் நமது கைபேசிகள்.

    ஐந்தாவது, நவீன அறிவியல் அடிப்படை படிப்பறிவு உள்ள அனைவரும் படித்து உணர்ந்து கற்று, செயல்படுத்தகூடிய தன்மையுடையது.

    இந்த ஐந்து குணங்களின் வழியே பண்டைய அறிவியல் அறிவை நோக்குவதன் மூலம், உண்மையான பண்டைய அறிவியல் வளர்ச்சியை அறிய முடியும்.

    முதலில், பண்டைய அறிவியல் குறுகிய அளவிலான கூர்நோக்கு தரவுகளை கொண்டுள்ளது. பண்டைய இலக்கியங்களிலோ, அல்லது நூல்களிலோ, பெரும் அளவு கூர்நோக்கு தரவுகள் இல்லை.

    பண்டைய அறிவியல், சூத்திரங்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டு விவரிக்கப்படவில்லை. அனைத்து சூழல்களிலும் அறிவியலை உபயோகிக்கும் அளவு, நமது அறிவு மேம்படவில்லை. ஒரு சிறு உதாரணமாக, வெடிமருந்து (Gun Powder) சீனாவில் கிபி904ல் கண்டறியப்பட்டது. ஆனால் நீண்டகாலமாக அதை போரிலோ அல்லது வேறு துறைகளிலோ உபயோகிக்கும் அளவு தொழில்நுட்ப அறிவு ஏற்படவில்லை.

    பண்டைய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வுகூடங்களில் கண்டறியபட்டவை அல்ல. சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டவை அல்ல. அவை முயற்சி மற்றும் பிழை (Trial and Error) முறையில் கண்டறியபட்டவை. அதனாலேயே, அவற்றை பற்றிய புரிதல் நம்மிடம் முழுவதும் இல்லை. பண்டைய அறிவியல் பெரிய அளவில் மீள் உருவாக்கம் செய்யப்படவில்லை. அவை பெரும்பாலும் ஒருமுறை சாதனைகளாக நின்றுவிட்டன. மேலும், அவை பரவலாக மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை. அதன் காரணமாக நமக்கு தெரிந்த அடிப்படை அறிவியல் அடுத்த தலைமுறைகளை அடையாமல் அழிந்து போனது. குலக்கல்வி மற்றும் சாதி அடிப்படையிலான தொழில் முறைகள், குறுகிய அறிவியல் அறிவை மேலும் குறுக்கிவிட்டன. இதன் மூலம், பண்டைய அறிவியல் வளர்ச்சி என்பது நவீன அறிவியல் வளர்ச்சியை ஒத்தது அல்ல என்பதை தெளிவாக கூற முடியும்.

    அதே சமயம், நாம் அறிவற்ற கூட்டமா என்ற கேள்வியும் எழும். நாம் அறிவற்ற கூட்டமும் இல்லை. நம்மிடம் கட்டுமானங்கள் எழுப்பவும், கடற்படை அமைக்கவும் அடிப்படை அறிவு இருந்தது. ஆனால் அவை எல்லாம் வரலாறு. அந்த அடிப்படை அறிவு, நவீன அடிப்படை அறிவை விட படிநிலையில் எந்த வழியிலும் மேம்பட்டது அல்ல. அவை நாம் பெருமை கொள்வதற்கான வரலாறு மட்டுமே. 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad