Header Ads

  • BREAKING



    மத்திய அரசின் புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA DRAFT 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?

    1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகள் மற்றும் பெரும் தொழில் திட்டங்கள் ஆகியவை தொடங்குவதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 1986-ன் ENVIRONMENT IMPACT ASSESSMENT (EIA) என்கிற அறிக்கையை தாக்கல் செய்து தொழிற்சாலை அல்லது பெரும் கட்டுமான திட்ட அனுமதியை பெற வேண்டும் என்று இருந்தது.

    EIA அறிக்கை என்பது ஒரு தொழிற்சாலை அல்லது பெரும் தொழில் கட்டுமானங்களோ அமைக்க போகும் இடத்தில் அந்த அமைப்பு வருவதால் ஏற்படக்கூடிய சாதக, பாதங்களையும் தாங்கள் பயன்படுத்த போகும் மூலப்பொருட்கள், உட்பொருட்கள் ஆகியனப்பற்றியும்,ஆலையில் உண்டாகும் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துவோம் என்றும்; ஆலைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன செய்யபோகிறோம் என்றும்; ஆலையால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் உட்பட இன்னும் பல அம்சங்களை அறிக்கையாக தயார் செய்து அரசிற்கு சமர்பிக்கவேண்டும். அரசு அதை நிபுணர் குழுவை வைத்து பரிசீலித்து அதில் எதாவது ஆபத்து என கண்டறிந்தால் அந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்காது.

    அனுமதி அளித்த பிறகு அறிக்கையில் உள்ளதற்கு மாறாக வேறு எதாவது சட்டபுறம்பான வகையில் மூலப்பொருட்களையோ, கழிவுகளை முறைகேடான முறையில் அப்புறப்படுத்துவதோ அல்லது வேறு எதாவது அறிக்கைக்கு முரணாக செய்யும்போதோ அதை சுட்டிகாட்டி உரிமத்தை ரத்து செய்ய வைக்கலாம்.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு பிறகு அனுமதி அளிக்கப்பட்டும் அதற்கான கால அளவு 30 நாட்களாக இருந்தது.

    இது இறுதியாக 2006ல் திருத்தப்பட்டு இப்போது வரை அந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இதுவும் பெரும் நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் ஆதரவான விதி என்றாலும் மேலோட்டமாக பார்க்கும் போது 2006ஆம் ஆண்டு விதி என்பது ஒரளவு ஜனநாயகத் தன்மை வாய்ந்தது.

    தற்போது இந்த விதியில் மத்திய பாஜக அரசு திருத்தத்தை செய்து EIA விற்கான புதிய வடிவம் எப்படி இருக்க போகிறது என புதிய வரைவை ஒன்றை உருவாக்கி கடந்த மார்ச் மாதம்  மக்கள் கருத்துகேட்புக்காக வெளியிட்டுள்ளது.

    இந்த புதிய வரைவில் ஏற்கனவே இருந்த அனைத்து அம்சங்களும் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. இனிமேல் பெரும் தொழிற்சாலைகளோ அல்லது சாகர்மாலா போன்ற மிகப்பெரும் திட்டங்களுக்கு கூட EIA என்ற அறிக்கை தேவையில்லை என்கிறது இந்த புதிய வரைவு.

    EiA அறிக்கை கொடுத்து தொழிற்சாலை தொடங்கியபோதே ஸ்டெர்லெட் வாயு கசிவு,ஆந்திராவில் ஆலையில் வாயுக்கசிவு, ஆலை விபத்து என்கிற பிரச்சனைகள் அதிகம் உள்ள நிலையில் தற்போது அந்த அறிக்கையும் தேவையில்லை என்கிறது புதிய வரைவு.

    தொழிற்சாலை அல்லது பெருந்திட்டம் அமையபோகும் இடத்தின் மக்களுக்கு இதை பற்றி தெரிவிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்கிறது இந்த புதிய வரைவு. இதனால் மக்களுக்கு தங்களுக்கு பாதகமான திட்டத்தை பற்றி தெரியவிடாமல் மறைக்கிறது.

    இந்த புதிய வரைவின் படி 30 நாட்களாக இருந்த கருத்து கேட்புக்கான அவகாசம் 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை பற்றி மக்களுக்கு தெரிவிப்பதை நிறுத்திய பிறகு கருத்து கேட்பிற்கு 300 நாட்கள் கொடுத்தாலும் அதில் பயனில்லை.

    ஏற்கனவே கருத்துக்கேட்பு என்கிற பெயரில் நடக்கும் கூத்துகள் சொல்லி மாளாது. முதலாளிகள் தங்களுக்கு ஆதரவானவர்களை காசு கொடுத்து கூட்டி வந்து சத்தமே இல்லாமல் ஆதரவு கொடுக்க சொல்லும் முறைதான் முன்னாள் இருந்தது. முதலாளிகளுக்கு இதில் ஆட்களுக்கு கொடுக்கும் செலவு என்பது அவர்களது லாபத்தை பாதிக்கும் என்பதால் ஏன் இந்த செலவு என்று சில திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டத்தின் விரிவாக்க பணிக்கு EIA, கருத்து கேட்பு நடவடிக்கை என எதுவுமே தேவையில்லை என்கிறது இந்த புதிய வரைவு.

    ஆக மொத்தம் மக்கள் எது நடந்தாலும் ஏற்கனவே கேள்வி கேட்க முடியும் என்கிற குறைந்தபட்ச ஜனநாய உரிமைக்கூட இப்போது கிடையாது என்பதே இந்த புதிய வரைவின் ஒரே நோக்கம்.நம் கண் முன்னே நம் நிலங்கள், வளங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு அதன் லாபம் தனிமுதலாளியின் பாக்கெட்டில் நெடுவாசல் போன்ற  எந்த மக்கள் இடையூறும் இல்லாமல் கொண்டு போய் சேர்வதை உறுதி செய்கிறது இந்த புதிய வரைவு.

    தொழிற்சாலைகள் தங்கள் லாபத்தை அதிகமாக அள்ளி குவிக்க பாதுகாப்பு அம்சங்கள், கழிவுகளை அப்புறப்படுத்துவது ஆகியவற்றில் செலவுகளை குறைத்து அதில் அக்கறையில்லாமலும், சில சேர்க்க கூடாத தடை செய்யப்பட்ட உட்பொருள்களை அதிக லாபம் பெற வேண்டி சேர்த்து தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிய பல்வேறு நிகழ்வுகளின் தொடர்ச்சியாகதான் அரசு இந்த EIA வரைவை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வந்தது. 

    இப்போதும் தொழிற்சாலை முதலாளிகள் எந்த பாதுகாப்பு அம்சங்களையும் செய்வதே இல்லை. அடிக்கடி நடக்கும் தொழிற்சாலை விபத்துகளை பார்த்தாலே தெரியும் இந்த புதிய வரைவு முதலாளிகளுக்கு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த எந்த நிர்பந்தத்தையும் கொடுக்காது என்று. ஏற்கனவே சட்ட விரோதமாக முதலாளிகள் செய்ததை இப்போது அரசு தொழிற்துறைக்கு ஊக்கம் அளித்தல் என்கிற பெயரில் அதை சட்டவழிபட்டதாகவே இந்த வரைவு மாற்றியிருக்கிறது.

    இந்த வரைவை சட்ட வடிவமாக்க கருத்து கேட்புக்கான காலவகாசம் கொடுக்க வேண்டும் என்றாவது அரசுக்கு தோன்றியதே!! ஆகஸ்ட் 11 இந்த வரைவு பற்றிய மக்கள் கருத்து தெரிவிக்க இறுதிநாள்.

    மக்களிடம் இது பற்றிய பிரச்சாரங்களை பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு அனைத்து ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி தேசிய இயக்கங்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் இந்த வரைவு தொடர்பான சாதக பாதகங்கள் தொடர்பாக மக்களிடம் பிரச்சாரமாக கொண்டு சென்று இந்த வரைவை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

                                                                           - சேரா

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad