Header Ads

 • BREAKING  எந்த வீட்டுக் குழந்தையாக இருந்தாலும், குழந்தையின் சிரிப்பை ஏற்றுக்கொள்கிறோம். இது இன்னொரு உயிரின் வாழ்வை, இருப்பை ஏற்றுக் கொள்ளுகிற மனப்பக்குவம்தானே? சுந்தர் காளி - தொ.ப உரையாடல்!

  "உங்கள் வீட்டுச் செடியில் அன்றைக்கு மலர்ந்த மலரைத் தனியாக நின்று பாருங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறையும். அது இன்னொரு உயிரின் வாழ்வை, இருப்பை ஏற்றுக் கொள்ளுகிற மனப்பக்குவம்தானே? எந்த வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் குழந்தையின் சிரிப்பை ஏற்றுக்கொள்கிறோம்"

  சுந்தர்-காளி:​ இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். முதலிய இயக்கங்கள் இந்த விளக்குப் பூஜையைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டன. ஓரிருவர் கோயில்களில் திருவிளக்கேற்றுவது என்பது வேறு. ஆனால், நூறு பெண்கள், ஐந்நூறு பெண்கள் என அணிதிரட்டி விளக்குப் பூசை நடத்துகின்றனர். இது பழைய விஷயமல்ல. ஒரு சடங்கை நவீனப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சனநாயகமான விஷயத்தைக் கூடப் பாசிசம் தனதாக்கிக் கொள்கிறது. அதை ஓர் அதிகாரமாக மாற்றமுடிகிறது. ஆரம்பத்திலிருந்தே நான் கேட்கிற கேள்வி இதுதான். தெய்வம் என்பது அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி சமூகம்தான். சமயம் என்பதும் கூட்டு அடையாளம் என்பதும் ஒன்றாக இருப்பவை.

  தொ.ப: நம் இருவருக்கிடையில் உள்ள முரண்பாடு இதுதான். நான் தெய்வநம்பிக்கை என்பதை முதலில் சொன்னேன். அதனுடைய வளர்ந்த கட்டம்தான் சமயம். இப்படிப் பிரித்துப் பார்க்க வேண்டும். திருவிளக்குப் பூஜை வைத்துக் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் ஊடுருவலை அச்சத்தோடு பார்த்திருக்கிறேன். அந்த விழாக்கள் ஏற்பட்டு 10, 15 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், ஒரு விழுக்காடு பெண்களைக்கூட அவர்களால் மீட்டெடுக்க முடியவில்லை. ஐயப்பன் வழிபாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்; நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் இரண்டு பேர் போவார்கள். இது ஆணின் இன்னொரு வகையான அதிகாரம். ஐயப்பன் மாலை போட்டவர்களை முப்பது நாளைக்குச் சாமி என்று மற்றவர்கள் கூறவேண்டும். இன்னும் சொல்லப் போனால் பெற்ற தாயே அவனைச் சாமி என்று கூறவேண்டும். நான் ஆசிரியர் ஆன பிறகு ஊருக்கு ஊரு இருபது பேருந்துகள் சபரிமலைக்குச் சென்றன. அதிலும் சாதி வந்துவிட்டது. ‘அவன் கீழ்ச்சாதிக்காரன். பத்துமுறை மலைக்குப் போய் வந்துவிட்டதால் அவன் எனக்குக் குருசாமியாக ஆகிவிடுவானா? என் சாதியிலேயே ஒரு குருசாமியைத் தேட வேண்டும்’ என்று ஒருவர் கூறினார். இரண்டு பேர் மட்டுமே மலைக்குப் போன எங்கள் ஊரில் 5000 பேர் சபரிமலைக்குப் போனதைப் பார்த்தேன்.

  இப்போது 500 பேர் மட்டுமே செல்வதைப் பார்க்கிறேன். Cult ஒன்றின் தோற்றம், எழுச்சி, சரிவு எல்லாவற்றையும் கண்ணாலேயே பார்க்கின்றோம். இந்து முன்னணி சார்பில் திருவிளக்குப் பூஜையைத் திட்டமிட்டுத்தான் தொடங்கினார்கள். அவர்களால் ஒரு விழுக்காடு பெண்களைக்கூட இதில் இழுக்க முடியவில்லை. அவர்களுக்கு வேண்டியது கூட்டம்தான். திருவளக்குப் பூஜைக்குப் போன பெண்கள் எல்லாம் அவர்கள் கட்சிக்கு வாக்களிப்பார்களா என்றால் அதுவும் கிடையாது. அந்த பூஜையும் இப்போது தளர்நிலையை எட்டிவிட்டது. ஏனென்றால், அந்தப்பூஜை எந்தவிதமான அதிகாரத்தையும் பெண்களுக்குத் தரவில்லை. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் பெண்களுக்கு ஆன்மீக அதிகாரத்தை அளித்தபோது பெருந்திரளான மக்கள் அங்கே திரண்டார்கள். எந்தத் தீட்டுக் கோட்பாட்டைக் கூறிப் பெண்களை ஒதுக்கிவைத்தார்களோ அதை மேல்மருவத்தூர் உடைத்தபோது அலை அலையாகப் பெண்கள் அங்கே போனார்கள். இதுவும் இப்போது தளர்நிலையை எட்டியுள்ளது. காரணம், அளவுக்கு அதிகமான சொத்துடைமைதான். ஓர் அதிகாரத்தை உடைத்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் இன்னொரு அதிகாரத்தை உருவாக்குகிறது. ஓர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இருபது பேர் இருந்தார்கள் என்றால் அவர்கள் இருபது பேருக்கும் பொறுப்புகள் தரப்படுகின்றன. வழிபாட்டு மன்றத்து மகளிர் அணிச் செயலாளராக நான் இருக்கிறேன் என்று மகிழ்ச்சியோடு சொல்லக்கூடிய பெண்களைப் பார்த்திருக்கிறேன். அதாவது உறுப்பினர் என்பதைத் தாண்டி இருபது பேருக்கும் சிறு அளவிலான அதிகாரம் தரப்பட்டது. மொத்தம் உள்ள இருபது பேரில் பத்துப் பேர்தான் பெண்கள். அதற்கு மகளிர் அணிச்செயலர், மற்றொரு பெண்

  துணைச்செயலர்-இப்படிப் பொறுப்புகள். ஆனாலும் இப்போது ஆதிபராசக்தி மன்றங்கள் தளர்நிலையை எட்டியுள்ளன. இப்படிக் காலந்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. நவீனம் வந்த பின்புதான் மரபுச்சுமைகள் அகன்றன என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

  "சித்தர்கள் மரபுச் சுமையை உடைக்கவில்லையா? கபிலர் அகவல் நம்மிடையேதானே பிறந்தது? மரபு சுமையாகும்போது உடைக்கிற முயற்சிதானே இது? 

  சுந்தர்-காளி:​ நம்மிடையே உடைப்புகள் இல்லாமல் இல்லை. ஐரோப்பியச் சமூகத்தில் மரபை முழுமையாக நிராகரிப்பது என்பது நவீனத்துவம் வந்த பின்புதான் நடக்கிறது.

  தொ.ப: கருவி வளர்ச்சி என்பதைத்தான் ‘அறிவு வளர்ச்சி’ என்று அவர்கள் கருதினார்கள். தொழிற்புரட்சி பற்றிப் பள்ளியில் நமக்குக் கற்றுக்கொடுக்கும்போதே ‘‘நூற்கும் ஜென்னி வந்தது’’, ‘‘தையல் எந்திரம் வந்தது’’ என்று அவர்கள் கண்டிபிடித்த கருவிகளைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பார்கள். 16ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் கைத்தறி நெய்ய இரண்டு பேர் வேண்டுமாம். தமிழ்நாட்டில் ஒற்றைத்தறி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம் தறிக்கு ஓர் ஆள் போதும். ஐரோப்பாவில் தொழிற்புரட்சி இயற்கையுடனான உறவைச் சிதைத்து, மரபுரீதியான வேர்களை அறுத்து, எல்லா விஷயங்களிலும் பிரமாண்டங்களைக் கட்டி அமைக்க முயற்சி பண்ணியது. திரும்பத் திரும்ப நவீனம், ஐரோப்பிய அனுபவம் என்று வார்த்தைகளை உதிர்ப்பது, பெரும் மூலதனம் குறித்த அச்சம்தான். ஏன் சீனாவையோ, ஜப்பானையோ நீங்கள் பேசக்கூடாது? பாரதி எழுதினார், ‘‘சீனா பெரும் பூதம் போன்றது. நான் நல்ல அர்த்தத்தில் சொல்லுகின்றேன். சீனா விழித்துக்கொண்டால் கீழ்த்திசை உலகம் எல்லாம் விழித்துக்கொள்ளும்’’ என்று. பாரதிக்கே ஐரோப்பாவின் பிரமாண்டம் பற்றிக் கருத்து இருந்திருக்கிறது. அதேநேரத்தில் சீனாவின் வளம், மக்கள்தொகை பற்றிய நம்பிக்கையும் இருந்திருக்கிறது. நீங்கள் மேற்குலகு பற்றி மட்டுமே அதிகம் அக்கறைப்படுகிறீர்கள். கிழக்கு உலகம் ஒன்று இருக்கிறதே?

  சுந்தர்-காளி:​ ஐரோப்பாவில் உருவானது நவீனத்துவம் என்று வைத்துக் கொண்டாலும் அறிவை முதன்மைப் படுத்தக்கூடிய விஷயம் எல்லா நாடுகளுக்கும் வந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் நவீனத்துவத்தைச் சார்ந்த அனுபவம் என்பது

  "ஒவ்வொரு விதமாய் இருக்கிறது. இந்தியாவில் ஒரு மாதிரியாகவும் ஜப்பானில் வேறொரு விதமாகவும் சீனாவில் மற்றொரு விதமாகவும் உள்ளது. ஆனால், நாம் எதற்காக ஐரோப்பாவை முன்னிறுத்துகிறோம் என்றால் நவீனத்துவத்தின் மூலமாக உயர்ந்த சில விஷயங்களை எட்டியது என்பதால். அதேபோன்று மிக மோசமான அழிவுகளைச் சந்தித்ததும் ஐரோப்பாதான். அதிலிருந்து சில நேரங்களில் பாடம் கற்றுக்கொள்ள முடிகின்றது. பாசிசம் மாதிரியான விஷயம் ஐரோப்பாவில் வந்ததுபோன்று வேறெங்கும் வரவில்லை. லட்சக்கணக்கான மக்களைக் கொடூரமாகக் கொன்று குவிக்கக்கூடிய நிகழ்வு வேறெங்கும் நடக்கவில்லை. இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் நடக்கமுடியுமா என்பது சந்தேகம்தான். பாபர் மசூதியை இடித்த நேரத்தில்கூடப் பேரழிவு எதுவும் ஏற்படவில்லை. சமயம் என்ற பொருளைப் பற்றிப் பேசும்போது நவீனத்துவத்தைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. சமயம் என்பது நவீனத்துவத்துடன் இந்தியச் சூழலில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளது.

  சமயம் வேண்டும் அல்லது வேண்டாம் என்ற வகைப்பாடெல்லாம் நமக்கு வந்துவிட்டது. ஐரோப்பிய நவீனத்துவத்தின் வாயிலாகச் சமயத்தையும், தெய்வ நம்பிக்கையையும் தாக்கிய பெரியாருடைய இயக்கம் இருந்த இடம் நம்முடைய இடம். அதனால் சமயம் என்ற அடையாளம் இல்லாத உலகத்தைப் பற்றி நாம் யோசிக்க முடியுமா என்பதிலிருந்து நாம் ஆரம்பித்தோம். அப்படியொரு உலகம் இருக்க முடியாது என்று நீங்கள் கூறினீர்கள். கடவுளற்ற உலகம் இருக்க முடியாது என்பதை உங்கள் பேச்சு தெளிவுபடுத்தியது.

  தொ.ப: கடவுளற்ற உலகம் அன்று; தெய்வமற்ற உலகம் என்று கூற வேண்டும். நான் அந்த வார்த்தையில் தெளிவாக இருக்கிறேன்.

  சுந்தர்-காளி:​ தெய்வமற்ற உலகம் என்பது இருக்க முடியாது. தெய்வம் இருக்கிற உலகமே ஓர் உலகம் இல்லை. அதிலே பலவிதமான உலகங்கள் உள்ளன.

  தொ.ப: பல்வேறு வகையான உலகங்கள் இருக்கலாம். ஆனால், எந்தவொரு உலகமும் மற்றொரு உலகத்தைச் சுரண்டுவதில்லை. அதனுடைய இடத்திலே அது அது இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன், இயற்கையிலிருந்து அதிகம் பாடம் கற்றுக் கொண்டவர்கள் எல்லாம் பூமியின் தென்பகுதியில் வசித்தவர்கள், உயிர்க்கூட்டமும் பயிர்க்கூட்டமும் இந்தத் தென்மண்டலப் பகுதியில்தான் அதிகம். இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதனாலே இன்னொரு உயிரின் இருப்பை ஏற்றுக்கொள்வது உணர்விலே அமைந்துவிட்ட ஒன்று. திரும்பத்திரும்ப நான் தாவரங்கள், வேர்கள் என்று பேசுவதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், அப்படி நாம் பேசுவதற்கான காரணம், தாவரங்களும் வேர்களும் அதிகமாக இருக்கும் நம் மண்ணிலே பிறந்த விஷயங்கள் என்பதால். இந்த விவாதத்தில் அடிக்கடி வரும் சொல் ‘அறிவு’. அறிவுவாதம் என்பது இங்கேயும் இருந்தது. ‘சுத்த அறிவே சிவம்’ என்று சைவம் சொல்லும். சைவம் ஒரு வகையில் பாசிசமானது. அதற்குக் காரணம் அங்கே எந்தவிதமான (‘அன்பே சிவம்’ என்று கூறினாலும்) சித்தாந்தத்தை நோக்கினாலும் திரும்பத் திரும்ப அந்த விவாதங்கள் கூர்மையான, இன்னும் கூர்மையான அறிவை நோக்கி நகர்வதாக இருக்கும். கடைசியாக இப்படி முடிப்பார்கள்: ‘சுத்த அறிவே சிவம்’ என்று. கண்ணப்பர் பற்றிச் சிவபெருமான் சிவகோசரியரிடம் கனவில் வந்து கூறுவார், ‘‘அவனுடைய அறிவெல்லாம் நம் பக்கல் அறிவு’’ என்று. அதாவது என்னை நோக்கிய அறிவு என்கிறார் சிவபெருமான். ஆக, கடவுளை அறிவது மட்டுமே உண்மையான அறிவு என்று சைவம் கூறுகிறது. அறிவு என்பதைப் பற்றி மட்டுமே நாம் நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. இங்கு ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ‘‘ஞானம் வேறு; பிரேமை வேறு’’. ஞானத்தைப் பற்றி மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பிரேமை இல்லாமல் மனித உயிர்க்கூட்டம் எப்படியிருக்கும்? உங்கள் வீட்டுச் செடியில் அன்றைக்கு மலர்ந்த மலரைத் தனியாக நின்று பாருங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறையும். அது இன்னொரு உயிரின் வாழ்வை, இருப்பை ஏற்றுக் கொள்ளுகிற மனப்பக்குவம்தானே? எந்த வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் குழந்தையின் சிரிப்பை ஏற்றுக்கொள்கிறோம். இன்னுமொரு உயிரின் வாழ்வை, இருப்பை ஏற்றுக்கொள்கிற இந்த மனப்பாங்கு இருக்கிதே அதுதான் பிரேமை. உயிர்க் கூட்டங்களுக்கு இடையேயான இயைபு எனச் சொல்லுவது இதைத்தான். அறிவுவாதமும் அன்புவாதமும் இரண்டும் சமமாகப் பிரிக்க முடியாதபடி ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல இருக்க வேண்டும். பிரேமையும், ஞானமும் பிரிக்கமுடியாதபடி இருக்க வேண்டும். நாணயத்தின் ஒரு பக்கம் தேய்ந்துபோனாலும் செல்லாத நாணயம்தான். எனவே, அறிவுவாதம் மட்டுமே மனித சமூகத்தை வளர்க்காது. அன்புவாதம் மட்டுமே சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச்செல்லாது. பாரம்பரியமான மருத்துவ அறிவியல், பாரம்பரியமான பொறியியல் நுணுக்கங்கள் இவையெல்லாம் அறிவுவாதத்தில்தானே வந்திருக்கின்றன? எழுத்து மரபு இல்லை என்பதால் சிலவற்றை நாம் அறிவாகக் காண்பதில்லை. தூத்துக்குடியில் எண்பது இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தோணியைக் கட்டுகிற ஆசாரிக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று பேராசிரியர் சிவசுப்பிரமணியன் என்னிடம் ஒருமுறை கூறினார். மனிதகுலத்தின் அடிப்படையான அறிவு என்பதே எண் சார்ந்தது; எழுத்துச் சார்ந்த விஷயமல்ல. மனித குலத்தின் பெரிய கண்டுபிடிப்பெல்லாம் எண்ணிலிருந்து பிறந்தன; எழுத்திலிருந்து பிறக்கவில்லை. அதை உணர்ந்ததால்தான் ‘‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’’ என்றனர். ‘‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப’’ என்று குறள் கூறும். ஏனென்றால், பள்ளிக்கூடத்தில் மழைக்குக் கூட ஒதுங்கி அறியாத எழுதப்படிக்கத் தெரியாத மக்களுக்கெல்லாம் எண்ணிக்கை தெரியும்.

  சுந்தர்-காளி:​ எண்ணை முதன்மைப்படுத்தினால் அதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. காலனி ஆதிக்கத்தின் முக்கியமான பணிகளில் ஒன்று எல்லாவற்றையும் எண்ணிக்கைப்படுத்துவது. சாதிகளைப் பட்டியல் இடுவதில் ஆரம்பித்து, ஆவணங்கள் எல்லாவற்றையும் தொகுப்பது, வரிசைப்படுத்துவது போன்ற செயல்கள் வரை காலனி ஆதிக்கத்தின் முக்கிய ஆடுமுறைகளுள் ஒன்று எண்ணிக்கைப்படுத்துவது.

  தொ.ப: பட்டியலிடுவது, தொகுப்பது அறிவு வளர்ச்சிக்குரிய விஷயம்.

  சுந்தர்-காளி:​ பட்டியல் இடுவதன் வாயிலாக மனித சமுதாயத்தையே காலனி ஆதிக்கம் மாற்றியமைக்கிறது. சென்சஸ் எடுப்பிற்கு முன்னிருந்த சாதி எண்ணிக்கை வேறு; சென்சஸ் எடுப்பிற்குப் பின்னிருந்த சாதி எண்ணிக்கை வேறு என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.ஆக முழுக்க எண்கள் அடிப்படையில் இந்தியச் சமுதாயத்தையே மாற்றி அமைக்கிறது காலனிய ஆட்சி.

  தொ.ப: நான் எழுத்து மரபிற்கு அதிக முக்கியத்துவம் தராதீர்கள் என்று கூறுகிறேன். எழுத்து என்பதே அதிகாரத்தின் பிறப்பிடமாகத்தான் இருந்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

  சுந்தர்-காளி: பின்நவீனத்துவத்தால் எழுத்து என்பதைத் தாண்டிய சிந்தனைகள் எல்லாம் வந்துகொண்டிக்கின்றன.

  தொ.ப: நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் எழுத்து மரபு, நகர்ப்புறம், பிரமாண்டம் இவையெல்லாம் அதிகாரத்தின் பல்வேறு வடிவங்கள். இவற்றுக்கு எதிரான சிந்தனைகள் எல்லாம் அரசுக்கு எதிரான சிந்தனைகள். அதனாலே கிராமப்புறத்தில் ஒற்றையறைக் கோயில்களாக இருக்கக்கூடிய நாட்டார் தெய்வங்களின் கோயில்கள், குறிப்பாக வடக்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில்கள் நம் கலாசாரத்தின் சொத்து என்று கூறுகிறேன். அவற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாது. ஏனென்றால், அழிந்துபட்ட அம்மன் கோயில்களை என் கள ஆய்வில் இதுவரை பார்த்ததில்லை. ஆனால், பிரமாண்டமாக அரசன் கட்டிய கோயில்கள் எல்லாம் அழிந்து சிதைந்துபோயிருக்கின்றன. கோயில் நகரமான சேரன்மாதேவிக்குப் போய்ப் பாருங்கள். மற்றவற்றின் இருப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் சமயத்திற்குக் கிடையாது. நவராத்திரிக்குப் பாளையங்கோட்டையில் எட்டுச் சாமிகள் ஒன்றாக வரும். அதில் மூத்த சாமி ஆயிரத்தம்மன். சூரனின் தலையை அக்கா சாமிதான் வெட்டும். மற்ற சாமிகள் கூட வரும். எல்லாச் சாமிகளும் கடைசியில் அக்காவை வீட்டுக்குச் கொண்டுவந்து விட்டுவிடும். ஆயிரத்தம்மன் சாமியாடிக்கும் உச்சி மாகாளியம்மன் சாமியாடிக்கும் எந்த முரண்பாடும் கிடையாது. இவன் அந்தச் சப்பரத்தை வணங்க, அவன் இந்தச் சப்பரத்தை வணங்க ரொம்ப இயல்பாக இருக்கும். சப்பரங்கள் ஊர்வலம் வரும்போது ஐந்து சப்பரம், ஏழு சப்பரம் என்று தேங்காய் உடைப்பார்கள். அப்படிச் சப்பரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்போது படித்த பெண்கள்கூட ‘முத்தாலம்மன் வந்துட்டாளா? பேராச்சியம்மன் வந்துட்டாளா?’ என்று ஒருவருக் கொருவர் விசாரித்துக் கொள்வார்கள். இந்த அந்நியோன்னியம் எந்தவிதமான அதிகாரமும் இல்லாத சூழல். அங்குள்ள ஒரே அதிகாரம் ஆயிரத்தம்மன் மட்டும் சூரன் தலையை வெட்டுவாள். அதையும் எந்த அம்மன் சாமியும் கேட்பதில்லை. எல்லோரும் ஒன்றாக வருகிறார்கள். ஒரு தர்கா ஊர்வலம், ஒரு சர்ச் ஊர்வலம், ஒரு சிவன் கோயில் ஊர்வலம் முதலியவற்றைச் சேர்த்து நடத்துவதைக் கற்பனை செய்ய முடியுமா?

  மற்றவற்றின் இருப்பை நிராகரிக்காதது என்பது மட்டுமல்ல; மற்றவற்றின் இருப்பை மனதார ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு கலாசார வேர் இன்னமும் உயிரோடு இருக்கிறது. அது இருக்கிறவரைக்கும் பாசிசம் குறித்தோ, நவீனத்துவம் குறித்தோ உங்களுக்குள்ள அச்சம் எனக்கு இல்லை. நீங்கள் அச்சப்படுவது நியாயம்தான்.

  ஒருவித மனிதநேய உணர்வோடுதான் நீங்கள் அச்சப்படுகிறீர்கள். நானும் வருத்தப்படுகிறேன். ஆனால், அச்சப்படவில்லை. ஏனென்றால், கொதிநிலையை எட்டிய பிறகு நாம் மீண்டும் வருவோம். திரும்பவும் இந்தப் பெருங்கோயில்கள் எல்லாம் பாழடையும்.

  இப்போது இந்து சமய அறநிலையத்துறையால் மட்டுமே இந்தப் பெருங்கோயில்கள் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. 

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad